தவெக களத்தில் இருக்கிறோமா.. இல்லையா? என்பதை தேர்தல் முடிவுகள் சொல்லும் – தமிழிசைக்கு செங்கோட்டையன் பதிலடி

Published On:

| By Pandeeswari Gurusamy

Sengottaiyan retaliates against tamizhisai

தமிழக வெற்றிக் கழகம் அரசியல் களத்தில் இருக்கின்றோமா? இல்லையா? என்பது குறித்து தேர்தல் முடிவுகள்தான் தீர்ப்பளிக்கும் என தமிழிசைக்கு செங்கோட்டையன் பதிலடி கொடுத்துள்ளார்.

கரூர் துயர சம்பவத்திற்குபிறகு 80 நாட்கள் கழித்து ஈரோடு சரளை பகுதியில் கடந்த டிசம்பர் 18ம்தேதி நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அக்கட்சி தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசினார். அப்போது பெரியார் பெயரைச் சொல்லிக் கொள்ளையடிக்கும் இவர்கள்தான் நம்முடைய அரசியல் எதிரிகள். உங்களுக்குப் புரிந்தால் போதும், எனக்கு வேறு எதுவுமே தேவையில்லை.

ADVERTISEMENT

அதனால் தான் எதிரிகள் யார் எனக் கூறிவிட்டுக் களத்திற்கு வந்திருக்கிறோம். அவர்களை மட்டும்தான் எதிர்ப்போம். அதுவும் அந்த எதிரிகளில் இப்போது இங்கே 2026 சட்டமன்றத் தேர்தலில் களத்தில் யார் இருக்கிறார்களோ, அவர்களை மட்டும்தான் எதிர்ப்போம். களத்தில் இல்லாதவர்களையும், களத்திற்கும் அவர்களுக்கும் சம்மந்தமே இல்லாதவர்களையும் எதிர்க்கும் எண்ணம் எல்லாம் இல்லை. நீங்கள் கேட்கிறீர்கள் என்பதற்காக எல்லாம் எதிர்க்க முடியாது. எங்களுக்கு நிறைய வேலை இருக்கிறது என்று தெரிவித்தார்.

விஜய்யின் இந்த கருத்துக்கு அதிமுக பாஜக, திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் “பொத்தாம் பொதுவாக பேசுவது எளிது. ஊர்க் குருவி எவ்வளவு உயரப் பறந்தாலும் பருந்தாகாது. களத்தில் நிலைபெறாதவர்கள், ஆலமரமாக வளர்ந்த அதிமுக இயக்கத்தைப் பற்றி பேசக்கூடாது. பலருக்கு அரசியல் நிழல் கொடுத்த இயக்கம் அதிமுக” என தெரிவித்திருந்தார்.

ADVERTISEMENT

மேலும் களத்தில் அதிமுகவின் இடத்தை பிடிக்க நினைத்தால் விஜய் ஏமார்ந்து விடுவார். மக்கள் அவரை இன்னும் ஒரு நடிகராகத்தான் பார்க்கிறார்கள். அரசியல் தலைவராக நினைக்கவில்லை என செம்மலை விமர்சித்திருந்தார்.

விஜய்யின் விமர்சனம் குறித்து பேசிய தமிழிசை, “உண்மையில் விஜய் தான் களத்தில் இல்லை. திடீரென வருகிறார். திடீரென காணாமல் போகிறார். எனவே விஜய் தன்னை தான் களத்திற்கு சம்மந்தமில்லாதவர் என சொல்லியுள்ளார் என நினைக்கிறேன்” என காட்டமாக விமர்சித்தார்.

ADVERTISEMENT

அதேபோல் பால்வாடி கட்சிக்கு போய் பவளவிழா கட்சி பதில் சொன்னால் அது நன்றாக இருக்காது என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று (டிசம்பர் 20) கோவை விமான நிலையத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவரிடம் செய்தியாளர்கள் SIR குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு , தவெக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதுவே பொருத்தமானதாக இருக்கும் என்றார்.

மேலும் ஈரோடு பொதுகூட்டத்திற்கு பின்னர் ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் ஒரு கருத்தை சொல்கின்றனர், தவழும் குழந்தைதான் பெரியவர் ஆவார்கள். பெரியவர் ஆனதற்கு அப்புறம் தான் தன்னுடைய தன்னாட்சி நடத்துவார்கள் எனவும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகம் களத்தில் இல்லாத கட்சி என பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை தெரிவித்து இருப்பது குறித்த கேள்விக்கு, அது அவருடைய கருத்து. நாங்கள் களத்தில் இருக்கின்றோமா? இல்லையா? என்பதை தேர்தல் முடிவுகள்தான் தீர்ப்பளிக்கும் என்றார்.

தவெகவின் அடுத்த பொதுக் கூட்டம் குறித்த கேள்விக்கு , இன்று மாலை அவரிடம் (விஜய்) பேசிவிட்டு எந்த இடம் என்பதை முடிவு செய்வோம் . எங்களைப் பொறுத்த வரையிலும் பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு , எங்கள் திருப்புமுனை எப்படி அமைந்து இருக்கிறது என நாடே வியக்கும் எனவும் செங்கோட்டையன் தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share