ADVERTISEMENT

தவெக தலைவர் விஜயை சந்தித்தார் செங்கோட்டையன்

Published On:

| By Pandeeswari Gurusamy

Vijay Sengottaiyan

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று (நவம்பர் 26) காலை தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த நிலையில் தற்போது தவெக தலைவர் விஜயை சந்தித்துள்ளார்.

ADVERTISEMENT

சென்னை பட்டினபாக்கத்தில் இன்று பிற்பகல் தவெக தலைவர் விஜய் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் செங்கோட்டையன் விஜய்யை சந்தித்து பேசுவது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT

அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கியதில் இருந்து அக்கட்சியின் எம்எல்ஏவாக இருந்து வந்த செங்கோட்டையன். கொங்கு மண்டலத்தின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும், முன்னாள் அமைச்சராகவும் இருந்தவர். தமிழக அரசியல் வரலாற்றில் ஒரே தொகுதில் 8 முறை வெற்றி பெற்றவர்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் எடப்பாடியுடன் இணைந்து செயல்பட்டார். எடப்பாடி பழனிசாமியின் அமைச்சரவையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்தார்.

ADVERTISEMENT

அதிமுகவில் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சி நிகழ்ச்சிகளில் இருந்து விலகி இருந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கடந்த செப்டம்பர் மாதம் செய்தியாளர்களிடம் மனம் திறந்து பேசினார். அதிமுகவில் இருந்து விலகியவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்றும் காலக்கெடு விதித்தார்.

இதைத்தொடர்ந்து செங்கோட்டையனின் கட்சிப் பதவியை பறித்தார் எடப்பாடி பழனிசாமி. இந்நிலையில் தேவர் குருபூஜையில் அதிமுகவிலிருந்து விலகிய ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலாவை வெளிப்படையாக சந்தித்தார். இதையடுத்து செங்கோட்டையனை கட்சி அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கினார் எடப்பாடி பழனிசாமி.

ADVERTISEMENT

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன் அதிமுகவில் குடும்ப அரசியல் நிலவுகிறது. கட்சிக்குள் எடப்பாடி பழனிசாமியின் மகன், மைத்துனர், மருமகன் உள்ளிட்டோரின் தலையீடு அதிகமாக உள்ளது என்று வெளிப்படையாக குற்றம் சாட்டினார்.

எடப்பாடி பழனிசாமி வரும் 30-ஆம் தேதி கோபிசெட்டிபாளையத்தில் ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரத்தில் பங்கேற்க உள்ளதாக அறிவிப்புகள் வெளியானது.

இதைத்தொடர்ந்து அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் இன்று காலை தமைமைச் செயலகத்திற்கு வந்து சபாநாயகர் அப்பாவுவிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

இதை தொடர்ந்து தற்போது தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகளை பனையூரில் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். செங்கோட்டையன் நாளை தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்த நிலையில் அதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த சந்திப்பு அமைந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share