கார்த்திகை தீபத்தை முன்னிட்டு செங்கோட்டையன் வெளியிட்ட போஸ்டர் வைரலாகி வருகிறது.
அதிமுகவில் 50 ஆண்டுகாலம் பயணித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கடந்த நவம்பர் 27-ஆம் தேதி நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து அவரது கட்சியான தவெகவில் தன்னை இணைத்துக்கொண்டார். தொடர்ந்து சொந்த ஊர் திரும்பிய செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், விஜய்யை முதல்வராக்க உயிர் மூச்சு உள்ளவரை உழைப்பேன் என்று தெரிவித்தார்.
கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள தனது அலுவலகத்தில், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் நடிகர் விஜய் ஆகியோரின் உருவப்படங்களுடன் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற வாசகத்துடன் கூடிய புதிய பெயர் பலகையை நிறுவினார்.
இந்நிலையில் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு அவர் வெளியிட்ட இந்த வாழ்த்து போஸ்டரும் பேசுபொருளாகி உள்ளது.

தீமையின் இருள் நீங்கி, உங்கள் வாழ்வில் நன்மையின் ஒளி வீசட்டும். அனைவருக்கும் இனிய கார்த்திகை தீப திருநாள் நல்வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த போஸ்டரில் தவெகவின் கொள்கை தலைவர்களான வேலுநாச்சியார், பெரியார், அம்பேத்கர், காமராஜர் அஞ்சலை அம்மாள் ஆகியோரது புகைப்படங்களுடன் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா என அதிமுக தலைவர்களும், புஸ்ஸி ஆனந்தின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற வாசகமும், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தின் புகைபடமும் இடம்பெற்றிருக்கிறது.
இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தவெகவினர் செங்கோட்டையனுக்கு ஆதரவாகவும், மற்றவர்கள் விமர்சித்தும் பதிவிட்டு வருகின்றனர்.
‘ஒரே போஸ்டரில் இத்தனை தலைவர்களா’ , ‘ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் புகைப்படைத்தை எப்படி பயன்படுத்துகிறீர்கள், ‘அமித்ஷா படத்தை போட மறந்துடீங்களே’ என கமெண்ட் செய்து வருகின்றனர்.
