அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மனம் திறந்து பேசிய நிலையில் இன்று காலை (செப்டம்பர் 8)டெல்லி செல்கிறார். டெல்லியில் பாஜக தலைவர்களை செங்கோட்டையன் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் செப்டம்பர் 5ம் தேதி செய்தியாளர்களை சந்தித்து மனம் திறந்து பேசினார். அப்போது கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை ஒருங்கிணைக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை அடுத்த 10 நாட்களுக்குள் தொடங்க வேண்டும். அதிமுக தலைமை அதற்கான முயற்சிகளை எடுக்கவில்லை என்றால் நானே அதற்கான நடவடிக்கைகளை எடுப்பேன் என்று தெரிவித்தார். செங்கோட்டையனின் இந்த பேச்சு அதிமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதைத்தொடர்ந்து செங்கோட்டையனை அதிமுகவின் அமைப்புச் செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் பொறுப்பிலிருந்து செப்டம்பர் 6ம் தேதி எடப்பாடி பழனிசாமி நீக்கினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள செங்கோட்டையன் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் அதிமுகவில் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். செங்கோட்டையனின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமாவின் பொறுப்புகளும் செப்டம்பர் 7ம் தேதி பறிக்கப்பட்டது.
அதிமுகவிலிருந்து வெளியேறியவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்ற செங்கோட்டையனின் குரலுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர் ஆதரவாக கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் செங்கோட்டையன் இன்று (செப்டம்பர் 8) காலை 8.50 மணியளவில் கோவை விமான நிலையத்திலிருந்து திடீர் பயணமாக டெல்லி கிளம்புகிறார். இதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. டெல்லியில் பாஜக தலைவர்களை சந்தித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து செங்கோட்டையன் ஆலோசனை நடத்த உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில நாட்களாக கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் அமைதி காத்த செங்கோட்டையன் செப்டம்பர் 5ம் தேதி செய்தியாளர்களை சந்தித்து அதிமுகவை பலப்படுத்த கட்சியில் இருந்து பிரிந்தவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்பதே எனது ஒரே வேண்டுகோள் என மனம் திறந்து பேசினார். ஆனால் எடப்பாடி பழனிசாமி அவரது வேண்டுகோளை புறக்கணித்ததோடு கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கிய நிலையில் செங்கோட்டையனின் டெல்லி பயணம் தமிழக அரசியலில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
