எடப்பாடிக்கு விஜயைப் பற்றி பேசுவதற்கு தகுதி இல்லை – செங்கோட்டையன் விளாசல்

Published On:

| By Pandeeswari Gurusamy

தூத்துக்குடியில் 13 பேர் குருவியைபோல் சுடப்பட்டபோது  செல்லாத எடப்பாடி பழனிசாமிக்கு தவெக தலைவர் விஜய் குறித்து பேச தகுதி இல்லை என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் இன்று (ஜனவரி 30) இரவு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம், “விஜய் சினிமாவில் சிறந்த நடிகர், அரசியலில் நாங்கள் தான் சிறந்தவர்கள்” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

ADVERTISEMENT

அதற்கு பதிலளித்த செங்கோட்டையன், “சினிமாவில் இருந்து வந்த எம்ஜிஆர் 3 முறை முதல்வராகவும், ஜெயலலிதா 5 முறை முதல்வராகவும் பதவி வகித்துள்ளனர். திரைப்படத்தில் நடிப்பவர்கள் அரசியலுக்கு வர முடியும், வெற்றி பெற முடியும் என்ற வரலாற்றை இந்தியாவுக்கே எம்ஜிஆர், என்.டி.ஆர் ஆகியோர் உருவாக்கிக் காட்டினர். இப்போது இருக்கும் நிலையில் திமுக –  தவெக இடையேதான் போட்டி நடக்கிறது. அதிமுக என்ற இயக்கம் எடப்பாடி பழனிசாமி சொல்வது போன்ற நிலையில் இல்லை” என்றார்.

மேலும்,பிரதமர் வந்தபோது என்டிஏ கூட்டணிக் கூட்டத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா புகைப்படங்கள் பேனரில் இல்லை. யாரை நம்பி இவர் கட்சியை நடத்துகிறார்? எடப்பாடி பழனிசாமி முகத்திற்காக ஓட்டு போடுகிறார்களா? அந்த அளவுக்கு செல்வாக்கு மிக்கவரா இவர்? குறிப்பாக எடப்பாடி பழனிசாமி எந்தத் தேர்தலிலும் தனிப்பட்ட முறையில் வெற்றி பெற்ற வரலாறு இல்லை. அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதை உணராமல் இருக்கிறார்.

ADVERTISEMENT

இவர் செல்வாக்கு மிக்க தலைவரை, மக்கள் விரும்பும் தலைவராக இருக்கும் விஜயைப் பற்றி பேசுவதை ஏற்க முடியாது. விஜய் ஆண்டுக்கு 500 கோடி ரூபாயை விட்டு மக்களுக்காகப் பணியாற்ற களமிறங்கியுள்ளார். அதிமுக, திமுக என யார் வீட்டுக்குச் சென்றாலும் அவர்களின் மனைவி, மகன், மகள் உள்ளிட்ட அனைவரும் புதிதாக வந்துள்ள தவெக தலைவர் விஜய்க்குத்தான் வாக்கு என்று சொல்லும் நிலை உள்ளது. இப்போது 40% வாக்கு எங்களுக்கு இருக்கிறது என்பது எங்கள் சர்வே மூலம் தெரியவந்துள்ளது.

இதுவரை சொல்லாத வார்த்தையை இப்போது ஏன் எடப்பாடி சொல்கிறார் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் விவகாரத்தில் 13 பேரை குருவிகளைச் சுடுவது போல சுட்டுக் கொன்றார்கள். அப்போது நேரில் சென்று முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி பார்த்தாரா? அங்கு 100 நாள் நடந்த போராட்டத்திற்கு அமைச்சர்கள் யாராவது பேச்சுவார்த்தைக்குச் சென்றார்களா? என்றும் கேள்வி எழுப்பினார். இப்போது அதையும் இதையும் பேசிக்கொண்டிருக்கிறார். இவர் முதல்வராக இருந்தபோது தூத்துக்குடிக்குச் சென்றிருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT

ஜெயலலிதா தங்கியிருந்த கோடநாடு எஸ்டேட்டில் 2 கொலைகள் நடைபெற்றன. அந்தச் சம்பவம் காலையில்தான் தனக்குத் தெரியும் என்கிறார் முதல்வராக இருந்தவர். இவர் எத்தனை முறை அம்மாவிடம் சென்றிருக்கிறார்? எடப்பாடி எப்படி முதலமைச்சரானார் என்பதும், எப்படித் தவழ்ந்து வந்தார் என்பதும் நாட்டிற்குத் தெரியும். அப்படி இருக்கையில் விஜயைப் பற்றி பேசுவதற்கு தகுதி இல்லை” என்று காட்டமாகத் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகம் தனித்து விடப்பட்டதா என்ற கேள்விக்கு, “பொதுவாக அந்த முடிவுகளைத் தலைவர்தான் மேற்கொள்ள வேண்டும். இதில் கருத்து சொல்வது சரியாக இருக்காது. அதிமுகவில் இருப்பவர்கள் பலர் பல கருத்துகளைச் சொல்வதைப் போல நாங்கள் சொல்வதில்லை. அங்கு ஒவ்வொருவரும் ஒரு கருத்தைச் சொல்வார்கள். எங்களைப் பொருத்தவரை தலைவர் என்ன சொல்கிறாரோ அதன் அடிப்படையில் பயணம் மேற்கொண்டிருக்கிறோம். எந்தக் கேள்வியாக இருந்தாலும் தெரிந்தவர்கள் பதில் சொல்ல வேண்டும் என்பதுதான் எங்கள் கருத்து. அதிமுகவில் ‘தெர்மாகூலர்’ பல்வேறு கருத்துகளைச் சொல்வதைப் போல நாங்கள் சொல்ல முடியாது. விஜய் நாளைய முதல்வர் ஆவதை எந்தச் சக்தியாலும் தடுக்க முடியாது” என்று செங்கோட்டையன் தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share