எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை விட எடப்பாடிக்கு பெரிய இடம்… செங்கோட்டையனின் திடீர் மாற்றம்!

Published On:

| By christopher

sengottaiyan give space for eps

எடப்பாடி பழனிசாமியுடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று (மார்ச் 31) எடப்பாடி புகைப்படத்துடன் ரமலான் வாழ்த்து தெரிவித்தது அரசியல் களத்தில் கவனம் பெற்றுள்ளது. sengottaiyan give space for eps

அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும், கோபிச்செட்டிப்பாளையம் சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளவர் கே.ஏ. செங்கோட்டையன்.

எனினும் சமீப காலமாக அவர் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அவரை சந்திப்பதை தவிர்த்து வந்தார்.

அத்திக்கடவு- அவிநாசி திட்டத்திற்கு நிதி ஒதுக்கியதற்காக கொங்கு பகுதியை சேர்ந்த விவசாயிகள் எடப்பாடி பழனிசாமிக்கு கடந்த மாதம் நடத்திய பாராட்டு விழாவில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் படங்கள் இல்லாததைக் குறிப்பிட்டு முதலில் தனது அதிருப்தியை தெரிவித்தார்.

அதன்பின்னர் எடப்பாடி பங்கேற்கும் கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்களை தவிர்த்து வந்தார்.

கடந்த 18ஆம் தேதி நடந்த சாணக்யா விருது விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட செங்கோட்டையன், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, மோடி உள்ளிட்டோரின் பெயரை குறிப்பிட்ட நிலையில், எடப்பாடி பெயரை ஒரு இடத்தில் கூட குறிப்பிடவில்லை.

அதன்பின்னர் சட்டமன்ற கூட்டத்தொடருக்கு முன்னதாக எடப்பாடி கூட்டிய அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திலும் அவர் பங்கேற்பதை தவிர்த்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 28ஆம் தேதி திடீரென டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அவர் சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்களை எழுப்பியது.

மேலும் செங்கோட்டையனை மையமாக வைத்து அதிமுகவை ஒருங்கிணைக்க பாஜக திட்டமிட்டு வருவதாகவும் பேசப்பட்டது.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி புகைப்படத்துடன் தனது ரமலான் தின வாழ்த்துச் செய்தியை செங்கோட்டையன் வெளியிட்டுள்ளதை அவரது ஆதரவாளர்களே சற்று அதிர்ச்சியுடன் இன்று பார்த்தனர்.

மேலும் அந்த வாழ்த்து போஸ்டரில் அண்ணா, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரது புகைப்படங்களை காட்டிலும் பெரிதாக எடப்பாடியின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது பலரின் புருவங்களை உயர்த்தியது.

மீண்டும் எடப்பாடியுடன் இணக்கமாகிவிட்டாரா அல்லது டெல்லி பாஜக தலைமையின் அறிவுறுத்தல் காரணமாக இது நடந்துள்ளதா என்ற பல்வேறு யூகங்களை செங்கோட்டையைனின் இந்த மாற்றம் அரசியல் களத்தில் எழுப்பியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share