முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். தவெக பிரச்சாரக் குழுவில் செங்கோட்டையனுக்கு 3ம் இடம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தவெக தலைமை மீது செங்கோட்டையன் அதிருப்தியில் இருப்பதாக பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது. மேலும் மாற்று யோசனையில் அவர் இருப்பதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது. இதற்கு செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் வந்தவன் நான். சோதனை ஏற்பட்ட போது என்னை கரம் பிடித்து அரசியலில் ஒரு வரலாறு படைகின்ற அளவிற்கு இன்று என்னை உருவாக்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் தளபதி அவர்கள் என்றும் என் நெஞ்சத்தில் நீங்கா இடம் பெற்றவர். அவர் 2026 இல் தமிழ்நாடு முதலமைச்சர் ஆகும் வரை நாங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து மக்கள் செல்வாக்கோடு அவரை ஆட்சி கட்டிலில் அமர வைப்போம். அவருடைய தியாகத்தையும், மனித நேயத்தையும் எவராலும் ஒப்பிட இயலாது. மக்கள் நெஞ்சங்களில் நிறைந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார். எங்கள் வாழ்வும், தமிழகத்தின் எதிர்காலமும், அவருடைய தலைமையில் அமையப் போகின்றது. அதற்காகத்தான் நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றி வருகிறோம்.
நாளிதழில் உண்மைக்கு மாறான செய்தி வெளியாகி இருப்பது வேதனை அளிக்கிறது. நடு நிலை என்று சொல்லிக்கொண்டு இதுபோன்ற தவறான செய்திகளை வெளியிடுவது பத்திரிகை தர்மத்திற்கு உகந்ததல்ல. இந்த செய்தியை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.
