தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாகவாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழகத்தில் புதிதாக கட்சி தொடங்கி உள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் முதல்முறையாக தேர்தலில் களம் கண்டுள்ளது. பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் விஜய் போட்டியிட்டார்.
நடந்து முடிந்த தேர்தலில் மொத்தமாக 4.88 கோடி வாக்களித்த நிலையில், 85.15% வாக்குகள் பதிவாகியது. வரும் மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை 6 மணியுடன் மேற்கு வங்கத்தில் 2ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியானது. நமது மின்னபலம் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் திமுக கூட்டணி 155 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அதிமுக கூட்டணி 72 இடங்களிலும், தவெக 5 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
இதுவரை வெளியாகி உள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் தவெக 20 இடங்களுக்கு மேல் கைப்பற்றும் என்று செய்திகள் வெளியாகவில்லை.
இந்நிலையில் இன்று காலை கோவை விமான நிலையத்தில் தவெக உயர்மட்ட மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். நேற்று வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அப்போது அவர் கூறுகையில், மக்கள் தீர்ப்பு வேறு, கருத்து கணிப்பு வேறு. மக்கள் மனநிலை புரியாமல் கருத்து கணிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக நான் கருதுகிறேன்.
எப்போதுமே கருத்து கணிப்பை பொறுத்தவரை, தலைவர், அம்மா காலத்தில் இருந்தே கருத்து கணிப்பிற்கும் வெற்றிக்கும் மாறுதலாக தான் இருந்திருக்கிறது. இதே நிலைதான் இப்போது நிலவப்போகிறது.
ஒவ்வொரு தேர்தலிலும் பார்த்தால் தெரியும் இலங்கை, நேபாளம், பங்களா தேசம், பஞ்சாப் என அனைத்து இடங்களிலும் கருத்துக் கணிப்புகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கருத்து கணிப்பு என்பது ஒரு குறிப்பிட்ட பேர் குறிப்பிட்டு சொல்வதுதான்.
மக்கள் அலை இதுவரை தமிழ்நாட்டின் வரலாற்றில் மட்டுமல்ல , இந்திய வரலாற்றில் இல்லாதபடி இருக்கும். பசுமை புரட்சி , வெண்மை புரட்சி, இன புரட்சி , சோசலிச புரட்சி வரிசையில் , அடுத்ததாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விசில் புரட்சிதான் உலக அளவில் தெரியப்போகிறது.
விஜய் 200 இடங்களில் வெற்றி பெறுவார் அவர் தான் தமிழகத்தை ஆள்வார், இது மக்களால் தீர்மானிக்கப்பட்டுள்ள ஒன்று” என தெரிவித்தார். மேலும் பெரிய சேனல்கள் யார் கருத்துக்கணிப்பு எடுத்திருக்கிறார்கள்? என கேள்வி எழுப்பிய அவர்
டைம்ஸ் நவ் சேனலுக்கு எங்களை பிடிக்காது” என தெரிவித்தார்.









