எடப்பாடிக்கு எதிராக செங்கோட்டையன்… சட்டமன்றத்தில் நடந்த சம்பவம்!

Published On:

| By Selvam

டாஸ்மாக் ஊழல் குறித்து விவாதிக்கக்கோரி சட்டமன்றத்தில் இன்று (ஏப்ரல் 7) அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்த நிலையில், செங்கோட்டையன் வெளிநடப்பு செய்யவில்லை. Sengottaiyan against Edappadi Palanisamy

தமிழக சட்டமன்றத்தில் இன்று ஊரக வளர்ச்சி மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை மீதான மானியக்கோரிக்கை நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

இந்தநிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி வசம் உள்ள டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழல் நடந்துள்ளதாக குற்றம்சாட்டி, இதுதொடர்பாக விவாதிக்ககோரி அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ‘அந்த தியாகி யார்?’ என்ற கருப்பு பேட்ச் மற்றும் பதாகையுடன் சட்டமன்றத்திற்கு வந்தனர்.

தொடர்ந்து டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தி, அமளியில் ஈடுபட்டனர். டாஸ்மாக் குறித்து விவாதிக்க அனுமதி அளிக்காததால், வெளிநடப்பு செய்தனர். அப்போது அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் எடப்பாடி பழனிசாமியுடன் வெளிநடப்பு செய்த நிலையில், செங்கோட்டையன் மட்டும் அவையில் இருந்தார்.

ADVERTISEMENT

அப்போது சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பிய செங்கோட்டையன் , “ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் வட்டம் பவானி டெஸ்டைல்ஸ் ஆடை தயாரிக்கும் தொழிற்சாலை விரிவாக்கம் செய்வதால் 15 லட்சத்து 68 ஆயிரம் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்படும். பிராசஸ் செய்தபிறகு 45 ஆயிரம் லிட்டர் தண்ணீரை வெளியேற்ற அனுமதி பெற்றுள்ளார்கள். ஆற்றில் சாயப்பட்டறை கழிவுகள் கலப்பதால், விவசாய நிலங்கள், கால்நடைகளுக்கு நச்சுத்தன்மை ஏற்படும். எனவே, ஆலை விரிவாக்கத்தை ரத்து செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, “ஆலை விரிவாக்கத்திற்கு எதிராக அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பவானி ஆற்றின் கரைகளில் உள்ள விவசாயிகள் முதல்வரை நேரில் சந்தித்து இந்த பிரச்சனை குறித்து தெரிவித்தனர்.

ADVERTISEMENT

எந்த காலகட்டத்திலும் விவசாயிகளின் விலைநிலங்கள் பாதிக்கப்படாது, குடிநீர் வழங்குவதில் பாதிப்பு வராது என ஸ்டாலின் உறுதியளித்திருக்கிறார்” என்று தெரிவித்தார்.

அண்மைக்காலமாக எடப்பாடி பழனிசாமியுடன் முரண்பட்டு வரும் செங்கோட்டையன், சட்டமன்றத்தில் வெளிநடப்பு செய்யாமல் இருந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி சட்டமன்றத்தில் பேச அனுமதி அளிக்க மறுப்பதாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த நிலையில், கே.பி.முனுசாமி அவையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share