கோவை சரளா நடிப்பை புகழ்ந்து தள்ளிய பிரபலங்கள்!

Published On:

| By Monisha

ஆர். ரவீந்திரன் மற்றும் ஏ.ஆர் என்டர்டெயின்மென்ட் அஜ்மல் கான், ரெயா தயாரிப்பில் இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில், கோவை சரளா, அஷ்வின்குமார் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் “செம்பி”.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (28.10.2022) காலை சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கத்தில் கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்றது.

ADVERTISEMENT

இவ்விழாவில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் தனஞ்செயன், “பிரபு சாலமன் மீண்டும் நம்மை ஆச்சரியப்படுத்துகிறார். எங்கு இப்படியான இடங்களைப் பிடிக்கிறார் என ஆச்சர்யமாக இருக்கிறது.

கோவை சரளா நடிப்பில் மிரட்டியிருக்கிறார். கமல் சார் ஒரு பட விழாவிற்கு வந்தால் அந்தப்படம் கண்டிப்பாக வெற்றி பெறும்” என்றார்.

ADVERTISEMENT

இயக்குநர் வசந்தபாலன், “கமல் சார் இன்னும் எல்லோரையும் இன்ஸ்ஃபையர் பண்ணிக்கொண்டு இருக்கிறார். கமல் சார் போன்ற ஆளுமை கிடைத்தது சினிமாவுக்கு பெருமை.

மிகக்குறைந்த பட்ஜெட்டில் மைனா, கும்கி என எடுத்து பிரமிக்க வைக்கிறார் பிரபு சாலமன். வெறும் பறவை பறக்கும் இயற்கையைத் தான் காட்டுகிறார். ஆனால், தியேட்டர் அதிர்கிறது. அதே போல் கோவை சரளா அவர்கள் பிரமிக்க வைக்கும் நடிப்பை தந்துள்ளார்” என கூறினார்.

ADVERTISEMENT

இயக்குநர் ஆர்.வி. உதயகுமார், “கமல் சாருக்கு என்னைவிடத் தீவிரமான ரசிகன் இருக்க முடியாது. அவரை வைத்து சிங்காரவேலன் படமெடுத்தேன், இன்றும் கொண்டாடும் படமாக இருக்கிறது.

sembi audio launch kamalhassan says sembi his favorite

அதற்குக் காரணம் கமல் சார் தான். அவர் ஒவ்வொரு காட்சியிலும் சின்ன சின்ன நகாசு வேலைகள் செய்து அசத்திவிடுவார். அஷ்வின் அவர்களே கமல் சாரை பார்த்து நடிக்க கற்றுக்கொள்ளுங்கள்.

தமிழ் சினிமாவில் வெகு சில இயக்குநர்களே இருக்கிறார்கள், அதில் முக்கியமானவர் பிரபு சாலமன். மனோரமா ஆச்சிக்குப் பிறகு அந்த இடத்தை நிரப்பக் கூடியவர் கோவை சரளா தான்” என்றார்

நாஞ்சில் சம்பத் கூறுகையில், “இந்தப்படம் ஒரு இயற்கை நாட்டியம், இந்தப்படத்தில் எதிர்க்கட்சிக்காரனாக ஒரு பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்றார் பிரபு சாலமன். அதுவே தான் எனது விருப்பமும். நான் நன்றாக நடித்ததாகக் கோவை சரளா சொன்னார். அவரை வாழும் மனோரமா என்றார்கள்.

அவர் ஆளும் மனோரமா” என்றார், கே.பாக்யராஜ் பேசுகையில், “கமல் விழாவுக்கு வந்தால் படம் ஜெயிக்கும் என்று இங்குச் சொன்னார்கள். அந்த ராசி எனக்கும் இருக்கிறது அவர் நடித்த 16 வயதினிலே தான் எனக்கும் ஆரம்பம்.

sembi audio launch kamalhassan says sembi his favorite

அந்தப்படத்தில் அவரது திறமையைப் பிரமித்துப் பார்த்திருக்கிறேன். அதே போல் கோவை சரளா அவர்களை எட்டு வயதிலிருந்தே எனக்குத் தெரியும். முந்தானை முடிச்சு படத்தில் என்னிடம் அடம்பிடித்து நடித்தார். அவரை மனோரமா போல் என்றார்கள் அது உண்மையான கருத்து. இந்தப்படத்தில் நடிப்பில் அசத்தியிருக்கிறார். பிரபு சாலமன் மிகச்சிறந்த இயக்குநர். கும்கி படத்தில் அவரை பார்த்துப் பிரமித்தேன். இந்தப்படம் டிரெய்லரே அற்புதமாக இருக்கிறது” என்றார்

இயக்குநர் பிரபு சாலமன் பேசுகையில், படத்தில் என்னுடன் தோள் கொடுத்து உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் பெரும் நன்றி. உங்களால் தான் இந்தப்படம் சாத்தியமானது. இந்தப்படத்தின் பாத்திரத்திற்காகப் பல காலம் அலைந்திருக்கிறேன்.

கொடைக்கானலிலிருந்து கொல்லிமலை வரை பலரைத் தேடினோம் இறுதியில் கமல் சாரின் சதிலீலாவதி ஞாபகம் வந்தது, உடனே கோவை சரளா அவர்களிடம் கதை சொன்னேன். என்னால் முடியுமா என்றார்கள், உங்களால் கண்டிப்பாக முடியும் என்றேன் படத்தில் அசத்திவிட்டார். இந்தப் படத்தில் அனைவருமே கடுமையாக உழைத்துள்ளார்கள்.

இந்தப்படத்திற்கு இசையால் உயிர் கொடுத்த நிவாஸுக்கு நன்றி. ரசிகனின் ரசனையை உயர்த்துகிற கமல் சார் இங்கு வாழ்த்தியது எனக்கு பெருமை” என்றார்.

sembi audio launch kamalhassan says sembi his favorite

நடிகர் கமல்ஹாசன், ”கோவை சரளாவை அக்கா, அம்மா என்று கூப்பிடுகிறார்கள், நான் என்ன சொல்வது என தெரியவில்லை. சரளா பாப்பாவை எனக்கு நன்றாகத் தெரியும். இதில் நன்றாக நடித்துள்ளார். எட்டு வயது பாப்பாவும் தயக்கமில்லாமல் நடித்துள்ளார். பலருக்கு இது வராது.

கேமரா ஆன் பண்ணியவுடன் அழுகை சிரிப்பு எதுவும் வராது. நடிப்பு வாய்ப்பு தேடும் காலத்தில் என்னையே பலர் திட்டியிருக்கிறார்கள். என்ன சார் கோவணம் எல்லாம் கட்டிக்கிட்டு எனச் சொன்னார்கள். ஆனால் இப்போது அதைக் கொண்டாடுகிறார்கள். அதைக்கேட்கச் சந்தோஷமாக இருக்கிறது.

ஒரு படம் பெரிய படமா சின்ன படமா என்பது காலம் கடந்து பேசப்படுவதில் தான் இருக்கிறது. இப்போது 16 வயதினிலே படத்தை பேசுகிறார்கள். அது தான் பெரிய படம். இத்தனை கோடியில் எடுத்தோமே அது என்ன படம் எனக்கேட்டால் அது பெரிய படம் இல்லை.

கொடைக்கானலில் மிக நல்ல லொகேஷன்களில் எடுத்திருக்கிறார். நான் படம் பார்த்து விட்டேன். தப்பு நடக்கும்போது நாம் கேள்வி கேட்கத் தயங்குவதைத் தைரியமாகப் பேசியுள்ளதென்பதால் எனக்கு மிகவும் பிடித்த படம். ரசிகர்கள் நல்ல படத்தைப் பாராட்ட வேண்டும் படம் நன்றாக இல்லை என்றாலும் தைரியமாகச் சொல்ல வேண்டும்.

அப்போது தான் சினிமா வளரும். நல்ல படத்திற்கு என் ஆதரவு எப்போதும் இருக்கும். பெரும் திறமையாளர்கள் என் கண் முன்னால் வாய்ப்பில்லாமல் அழிந்து போயிருக்கிறார்கள், அதனால் நல்லவற்றைப் பாராட்டத் தயங்காதீர்கள். கற்றுக்கொள்ளத் தயாராக இருங்கள்.

அஷ்வின் நன்றாக நடித்திருக்கிறார். தம்பி ராமையா அசால்ட்டாக நடித்திருக்கிறார். நான் ரசித்துப் பார்த்தேன். நாஞ்சில் நடிப்பும் பிரமாதமாக இருந்தது. கேமரா மிக அற்புதமாக இருந்தது. அனைவருக்கும் என் வாழ்த்துகள். நல்ல படம் வெற்றிப்படம் என்பதை ரசிகர்களே முடிவு செய்வார்கள். செம்பி மிகப்பெரிய வெற்றி பெறும்” என்றார்.

இராமானுஜம்

ரஜினியை சந்தித்த ‘காந்தாரா’ ரிஷப் ஷெட்டி

தொடர் சரிவில் தங்கம் விலை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share