விஜய்யின் தமிழக வெற்றி கழகத்துக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் சட்டப்பேரவையில் இன்று பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வபெருந்தகை, முதல்வர் ஸ்டாலின் ”விசில் அடிக்கும் குஞ்சுகளின் தலைவர் அல்ல” என குறிப்பிட்டது பேசுபொருளாகி இருக்கிறது.
தமிழக சட்டப்பேரவையில் 100 நாள் வேலைத் திட்டம் தொடர்பான தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்தார். இந்த தீர்மானத்தின் மீது செல்வப்பெருந்தகை பேசியதாவது: தமிழ்நாட்டு நலனை யார் காட்டி கொடுத்தாலும், மறைமுகமாகவும் முகமூடி அணிந்தும் புதுடெல்லிக்கு அடகு வைத்தாலும் தனி ஒரு தலைவனாக தமிழ்நாட்டைக் காப்பேன் என உறுதியேற்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவிக்கிறோம்.
தமிழ்நாட்டு மக்கள் எல்லாம் எதற்கும் அஞ்சாதவர்கள். தைரியமானவர்கள்; ஏழை எளிய மக்களைப் பாதுகாப்பவர்கள் என்ற வரிசையில் இங்கே படங்களாகவும் பாடங்களாகவும் இருக்கிறவர்கள் மத்தியில் மீண்டும் மீண்டும் தன்னை நிரூபித்துக் காட்டிக் கொண்டிருப்பவர்தான் முதல்வர் ஸ்டாலின்.
ஏனென்றால் தமிழ்நாட்டு மக்கள் விசில் அடிக்கிற குஞ்சுகளும் அல்ல; முதல்வர் அந்த கூட்டத்தின் தலைவரும் அல்ல. தன்மானத் தமிழர்களின் தலைவர் என இந்த தீர்மானத்தின் மூலமாக நிரூபித்து காட்டி இருக்கிறார் என்றார்.
திமுக- காங்கிரஸ்- விஜய்- செல்வப்பெருந்தகை
2026 சட்டப்பேரவை தேர்தலுக்காக திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியது. ஆனால் ஆட்சியில் பங்கு, அதிக தொகுதிகள் என நிபந்தனை விதித்து வருகிறது காங்கிரஸ். இந்த நிபந்தனைகளை ஏற்க முடியாது என முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக காங்கிரஸுக்கு தெரிவித்துவிட்டார்.
இதனால் திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடருமா? 100 சீட் சீட், துணை முதல்வர் பதவி தருகிறோம் என சொல்லும் விஜய்யின் தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்குமா? என்ற பரபரப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் சட்டப்பேரவையில் திடீரென காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, விசில் அடிக்கும் குஞ்சுகளின் தலைவர் அல்ல முதல்வர் ஸ்டாலின் என்று மறைமுகமாக விஜய்யை தாக்கி பேசியிருக்கிறார். விஜய் கட்சிக்கு நேற்றுதான் விசில் சின்னம் ஒதுக்கப்பட்டது. பொதுவாக விஜய் ரசிகர்கள்தான் தவெக தொண்டர்கள் என்பதால் விசிலடிச்சான் குஞ்சுகள் என விமர்சிக்கப்படுகின்றனர். அதே வார்த்தையை சட்டப்பேரவையில் செல்வப்பெருந்தகை பயன்படுத்தியிருப்பது தற்போது கவனம் பெற்றுள்ளது.
மேலும் முன்னெப்போதும் இல்லாத வகையில் முதல்வர் ஸ்டாலினை அளவுக்கு அதிகமாகவே செல்வப்பெருந்தகை இன்று புகழ்ந்து பேசியதும் குறிப்பிடத்தக்கது.
சட்டப்பேரவையில் செல்வப்பெருந்தகையின் பேச்சு முழுமையாக
