பிரதமர் மோடி மே 30 முதல் ஜூன் 1 வரை மூன்று நாள் பயணமாக தமிழகம் வருகிறார். தொடர்ந்து மே 31-ஆம் தேதி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் மோடி தியானம் மேற்கொள்கிறார்.
இந்தநிலையில், ஜூன் 1-ஆம் தேதி நாடாளுமன்ற இறுதிக்கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழகத்திற்கு வந்து மோடி தியானம் மேற்கொள்வது தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறுவதாகவும். இதனால் கன்னியாகுமரியில் மோடி தியானம் செய்வதற்கு தேர்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“இறுதிகட்ட தேர்தல் நடைபெற இருக்கிற 57 மக்களவைத் தொகுதிகளில் அரசியல் ஆதாயம் தேடுவதற்காக விவேகானந்தர் பாறையில் தியானம் செய்ய பிரதமர் மோடி தேர்வு செய்திருப்பதைவிட ஒரு அரசியல் மோசடி வேறு எதுவும் இருக்க முடியாது.
பதவிக்காக மோடி எவ்வளவு தரம் தாழ்ந்த நிலைக்கும் செல்வார் என்பதற்கு இந்தத் ‘தியான நாடகம்” ஒரு உதாரணமாகும். சுவாமி விவேகானந்தர் தம் வாழ்நாள் முழுவதும் மதநல்லிணக்கத்தைக் கடைப்பிடித்து இந்துமதத்தை உலகம் முழுவதும் பரப்பியவர்.
குஜராத் மாநில முதலமைச்சராக மோடி இருந்தபோது ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பகிரங்கமாகப் படுகொலை செய்யப்பட்டபோது, ரோம் நகர் தீப்பற்றி எரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்ததைப்போல கண்டும் காணாமல் இருந்தவர் தான் இன்றைய பிரதமர் மோடி.
இளமை காலத்திலேயே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் சேர்ந்து, மக்களை மதரீதியாகப் பிளவுபடுத்தும் கோல்வால்கரின் சிந்தனைத் தொகுப்புகளைப் படித்து வளர்ந்த மோடியால் விவேகானந்தரின் உரைகளைப் படித்திருக்க வாய்ப்பில்லை. அப்படியே படித்திருந்தாலும் அதை ஏற்றுக் கொள்கிற மனநிலை அவருக்கு இருந்திருக்காது.
ஆன்மீக மாண்புகளை மீறி மதவெறியால் ஆட்கொள்ளப்பட்டு, ஆரோக்கியமற்ற விரக்தியான மனநிலைக்குச் சென்றுவிட்ட மோடி, ஆன்மீக ஞானக்கடல் விவேகானந்தர் பாறையில் தியானம் செய்வது என்பது ஏமாற்று நாடகம்.
விவேகானந்தரின் போதனைகளை ஏற்று அவரைப் போற்றுபவர்கள் எவரும் மோடியின் தியான முடிவை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். விவேகானந்தரை இழிவுபடுத்துகிற முயற்சியில் ஈடுபட்டு, அதன்மூலம் இந்து மதத்திற்கே களங்கம் கற்பிப்பவராக மோடியின் தியான நாடகம் அமைந்திருக்கிறது.
இது அரசியல் நோக்கம் கொண்டதே தவிர, ஆன்மீக நோக்கம் கொண்டதல்ல. மே-30 அன்று, கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறையில் மோடி மேற்கொள்ளும் தியான நாடகம், தமிழ்நாட்டிற்கு மட்டும் அவமானமல்ல. இந்தியாவிற்கே அவமானமாகும்.
மோடி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் தன்னந்தனியாக தியானம் செய்கிற மூன்று நாட்களும் அங்கு சுற்றுலா பயணிகள் எவரும் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
இந்த தடை மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கிற செயலாகும். இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.
விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்வதற்கு மோடிக்குக் கடுகளவும் சட்டப்படி உரிமை இல்லை என்பதை இங்கே உறுதியாகச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
ஏழாம் கட்ட இறுதித் தேர்தல் பரப்புரை மே 30ஆம் தேதி மாலையோடு முடிவடைகிற நிலையில், விவேகானந்தர் மண்டபத்தில் அமர்ந்து மௌனமாகத் தியானம் செய்வது, பா.ஜ.க.வுக்கு ஆதரவாக நேரடியாகவோ, மறைமுகமாகவோ, தொலைக்காட்சி ஊடகங்கள் மூலமாக வாக்களிக்கத் தூண்டுகிற பரப்புரையாகவே கருதவேண்டும்.
இதன்மூலம் தேர்தல் நடத்தை விதிமுறைகளை ஒரு பிரதமரே அப்பட்டமாக மீறுகிற செயலாகும். இது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானதாகும்.
மோடியின் தியானம் மேற்கொள்கிற நடவடிக்கைக்குத் தேர்தல் ஆணையம் தடைவிதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரியிடமும், அதற்கு அனுமதி அளிக்கக் கூடாதென்று தமிழ்நாடு தலைமைக் காவல்துறை அதிகாரியிடமும் நேரில் சந்தித்து வலியுறுத்த காங்கிரஸ் சார்பில் இன்று கோரிக்கை மனு அளிக்க இருக்கிறோம்.
இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கிற வகையில், பிரதமர் மோடி, விவேகானந்தர் மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்ய தடைவிதிக்க வேண்டும் என்று கோருகிறோம்”என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோடியின் பயோபிக் மணிவண்ணன் எடுத்தால் நன்றாக இருக்கும் – சத்யராஜ் நச் கமெண்ட்!
மனுதர்ம மாணவர்களாக மாற்ற முயற்சி: ஆளுநரை சாடும் டி.கே.எஸ்.இளங்கோவன்