ADVERTISEMENT

காங்கிரஸ் கட்சியினர் முரண்பட்ட கருத்துகளை சொல்ல மாட்டார்கள் – செல்வப்பெருந்தகை

Published On:

| By Pandeeswari Gurusamy

காங்கிரஸ் கட்சியினர் இனி முரண்பட்ட கருத்துகளை சொல்ல மாட்டார்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. திமுக, அதிமுக ஆகிய இரு தரப்பினரும் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 2026 சட்டமன்றத் தேர்தலில் முதல் முறையாக போட்டியிட உள்ள நிலையில், தங்களுடன் கூட்டணி வரும் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு வழங்கப்படும் என விஜய் அறிவித்துள்ளார். ஆனால் இதுவரை தவெகவுடன் எந்தக் கட்சியும் கூட்டணிக்கு வரவில்லை.

ADVERTISEMENT

இந்தச் சூழலில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியில் உள்ள மாணிக்கம் தாகூர் எம்.பி. , பிரவீன் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் ஆட்சியில் பங்கு வேண்டும் என வெளிப்படையாகக் கருத்து தெரிவித்து வந்தனர். இது திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியில் ஒரு தரப்பினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில், கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த திமுக குழு அமைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்திருந்தது.

இதைத் தொடர்ந்து, இன்று கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தும் வகையில், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களைச் சந்தித்தார்.

ADVERTISEMENT

அப்போது, திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளதால் சீட் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதா என செய்தியாளர்களின் கேள்விக்கு, “அது குறித்து அந்தக் கட்சித் தலைவர்கள் முடிவு செய்வார்கள். எங்களைப் பொறுத்தவரை, காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைமை இதை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறது. கூட்டணியில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஏற்கெனவே வலிமையாக உள்ள கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் சேர்வதால் மேலும் வலிமை பெறும்” எனத் தெரிவித்தார்.

கூட்டணி நிலைப்பாட்டில் காங்கிரஸ் கட்சியில் உள்ள சிலர் முரண்பாடான கருத்துகளைத் தெரிவிப்பது குறித்த கேள்விக்கு, “இனி முரண்பட்ட கருத்துகளைச் சொல்ல மாட்டார்கள்.. பொறுத்திருந்து பாருங்கள்” எனத் தெரிவித்தார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share