ராகுலை முகத்தில் துண்டு போட்டு சென்று கனிமொழி பார்த்தாரா?- எடப்பாடிக்கு செல்வப் பெருந்தகை பதிலடி

Published On:

| By Pandeeswari Gurusamy

ராகுலைச் சந்திக்க துணிச்சலான சிங்கப் பெண்மணியாக இருக்கும் கனிமொழி தனது காரில் சென்றார். மாற்றுக் காரில் செல்லவில்லை. முகமூடி அணிந்து கொண்டு போகவில்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

சேலத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “கனிமொழி டெல்லி சென்று ராகுல் காந்தியை சந்திக்கிறார். இவர்கள்தான் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு அடிமை என்று சொன்னார்கள். யார் அடிமை? திராவிட முன்னேற்றக் கழகம்தான் அடிமை. இன்று இங்கிருந்து டெல்லி போய் கெஞ்சும் நிலைக்கு வந்துவிட்டது திமுக. அங்கு போய் ராகுல் காந்தி, சோனியாவை சந்தித்தார்கள். அப்படியென்றால் திமுக-காங்கிரஸ் இடையே குழப்பம் வந்துவிட்டதுதானே? திமுகவில் காங்கிரஸ் இருக்குமா என்பதில் தடுமாற்றம் உள்ளது” என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT

இந்நிலையில், இன்று காலை திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகையிடம், “திமுகதான் டெல்லிக்கு அடிமையாக உள்ளது” என்ற எடப்பாடியின் விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில், “நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி முகத்தில் துண்டு போட்டுக்கொண்டு சென்றா தலைவர் ராகுல் காந்தியைப் பார்த்தார்? முகத்தில் துண்டு போட்டு மாறுவேடம் போட்டுப் போய்ப் பார்த்தது யார்?

அடிமையாக இருப்பவர்கள்தான் பயந்து பயந்து போய்ப் பார்க்க வேண்டும். துணிச்சலான சிங்கப் பெண்மணியாக இருக்கும் கனிமொழி தனது காரில் சென்றார். மாற்றுக் காரில் செல்லவில்லை. முகமூடி அணிந்துகொண்டு போகவில்லை. நேராகச் சென்று எங்கள் தலைவரைப் பார்த்து அரைமணி நேரம் பேசினார்.

ADVERTISEMENT

நாங்கள் பேசியதை மறுக்கவில்லையே?போகும்போது துணியைப் போட்டுக்கொண்டு மூடிக்கொண்டு போவது, வரும்போது துணியைப் போட்டு மூடிக்கொண்டு வருவது எல்லாம் எதற்கு? தமிழ்நாட்டு மக்களை அடகு வைப்பதற்கும், தமிழ்நாட்டு உரிமைகளை பாஜகவுக்கு விட்டுக் கொடுப்பதற்கும் போனார்கள்.

ஆனால் இந்தச் சந்திப்பு அப்படிப்பட்ட சந்திப்பு அல்ல. நேர்மையான சந்திப்பு, கண்ணியமான சந்திப்பு.காங்கிரஸைப் பொறுத்தவரை திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக்கு எந்த விதமான நெருக்கடியும் கொடுக்கவில்லை. அப்படிக் கொடுக்கவும் மாட்டோம். நெருக்கடி கொடுப்பவர்கள் காங்கிரஸ் கிடையாது. எங்களுக்கு எது வேண்டுமோ அதை கேட்போம், பெறுவோம். இதில் என்ன இருக்கிறது?

ADVERTISEMENT

எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு பிரம்மை. அவர் மனதிற்குள் இருப்பது அவரைத் துன்புறுத்துகிறது. நாங்கள் அப்படிச் சொல்லவே இல்லையே. ஒரு செய்தியாளர் சந்திப்பில் ‘நான் முகமூடி எல்லாம் போடவில்லை, அப்படி எழுதாதீர்கள்’ என்றார் எடப்பாடி. அது ஒரு பொருந்தாக் கூட்டணி, இயற்கைக்கு எதிரான கூட்டணி. நரேந்திர மோடி பேசும்போது ஒரு வார்த்தை கூட எடப்பாடி பழனிசாமி என்று உச்சரிக்கவில்லை. ஒரு வார்த்தை கூட அதிமுக என்று உச்சரிக்கவில்லை. பாஜக-என்டிஏ கூட்டணி என்றார்.

இப்போது எங்கள் தலைவர் ராகுல் காந்தி வந்தால் இது இந்தியா கூட்டணி.. இதில் திராவிட முன்னேற்றக் கழகம், பொதுவுடைமைக் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், வாழ்வுரிமைக் கட்சி, கொங்கு நாட்டுக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சிகள் இருக்கின்றன என எல்லா கட்சிகளின் பெயர்களையும் சொல்வார்” என்று தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share