சுதந்திர தினவிழா… தமிழகம் முழுவதும் காங்கிரஸ் இருசக்கர வாகன பேரணி!

Published On:

| By Selvam

இந்தியா முழுவதும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி 78-ஆவது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அனைத்து கட்சிகளின் சார்பிலும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

அந்தவகையில், தமிழக காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அக்கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை மாவட்ட நிர்வாகிகளுக்கு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தேசியக் கொடி பொருத்தப்பட்ட நூற்றுக்கணக்கான இருசக்கர வாகன அணிவகுப்பை முக்கிய வீதிகளில் நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“இந்திய தேசிய காங்கிரசுக்கும், தேசிய கொடிக்கும் உள்ள உறவை பாஜக உள்ளிட்ட எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை ஏற்றி கொண்டாடுவதற்கு அனைவருக்கும் உரிமை இருக்கிறது.

ஆனால் பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின்பேரில் வழக்கத்திற்கு மாறாக மாநிலங்களில் தேசிய கொடி அணிவகுப்பு நடத்தி சொந்தம் கொண்டாட முற்படுவதற்கு பாஜகவுக்கு எந்த உரிமையும் இல்லை.

இன்றைய பாஜகவின் தாய் ஸ்தாபனமான ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொள்கை வகுப்பாளர் எம்.எஸ். கோல்வால்கர் எழுதிய சிந்தனை தொகுப்பில் மூவர்ணம் கொண்ட தேசிய கொடியை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று பகிரங்கமாக அறிவித்தார்.

ஆனால், விடுதலை போராட்ட எழுச்சியை பார்த்த ஆர்எஸ்எஸ் முதல் முறையாக நாக்புரியில் உள்ள தலைமை அலுவலகத்தில் முதல் சுதந்திர தினமான 15 ஆகஸ்ட் 1947 மற்றும் முதல் குடியரசு தினமான 26 ஜனவரி 1950 இல் ஏற்றியதற்கு பிறகு 52 ஆண்டுகள் கழித்து 26 ஜனவரி 2001 இல் தான் தேசிய கொடியை ஏற்றினார்கள் .

இடைப்பட்ட52 ஆண்டுகாலம் தேசிய கொடியை ஏற்றாமல் புறக்கணித்து அவமதித்த தாய் ஸ்தாபனமான ஆர்.எஸ்.எஸ். வழி வந்த இன்றைய பாஜக தேசிய கொடியை சொந்தம் கொண்டாடி அபகரிக்க முயல்வதை தேசபக்தியுள்ள எவரும் அனுமதிக்க மாட்டார்கள்.

தேசியக் கொடிக்கு சொந்தம் கொண்டாட முற்படும் பாஜகவின் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டியது விடுதலைக்கு போராடி நவ இந்தியாவை உருவாக்கிய இந்திய தேசிய காங்கிரசுக்கு உண்டு.

எனவே, வருகிற 78 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தேசியக் கொடி பொருத்தப்பட்ட நூற்றுக்கணக்கான இருசக்கர வாகன அணிவகுப்பை முக்கிய வீதிகளில் நடத்த வேண்டும்.

இதை தவிர வட்டார/ சர்க்கிள், நகர, பேரூர், கிராமங்களில் தேசியக் கொடியை தாங்கி பாதயாத்திரை நடத்தி விடுதலை போராட்ட வரலாற்றையும், தேச தந்தை காந்தியடிகளின் பங்களிப்பையும் விளக்குகின்ற வகையில் கூட்டங்களை நடத்த வேண்டும்.

இதன்மூலம் தேசியக் கொடியோடு இந்திய தேசிய காங்கிரசுக்கு இருக்கிற உரிமையையும், கொடியின் பெருமையை காக்க திருப்பூர் குமரன் போன்றவர்கள் செய்த தியாகத்தையும் மக்களிடையே பறைசாற்றி நினைவு கூறுகிற வகையில் சுதந்திர தின விழா சீரும், சிறப்புமாக நடத்திட அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பாகிஸ்தான் வீரர் அர்ஷத் புதிய ஈட்டி வாங்க உதவிய நீரஜ் சோப்ரா… பார்டரை தாண்டிய நட்பு!

“ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றது” – அதானி குழுமம் விளக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share