ஆம்ஸ்ட்ராங் கொலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகைக்கு தொடர்பு இருப்பதாக பகுஜன் சமாஜ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 7ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திமுக, அதிமுக, பாஜக, தமாக, விசிக என பல கட்சிகளை சார்ந்தவர்களும், வழக்கறிஞர்களும் கைது செய்யப்பட்டனர்.
இந்தநிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலையில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு இருப்பதாகவும், அதனால் அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பகுஜன் சமாஜ் கட்சி கடிதம் இன்று (செப்டம்பர் 19) எழுதியுள்ளது.
அதில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக உள்ள செல்வப்பெருந்தகை 2008 முதல் 2010 ஜூலை வரை பகுஜன் சமாஜ் கட்சியில் மாநில தலைவராக இருந்தார். அதன் பிறகு புரட்சி பாரதம், விசிக, புதிய தமிழகம் என காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கு முன் பல்வேறு கட்சிகளிலும் இருந்தார்.
ஆடிட்டர் பாண்டியன், ஆல்பர்ட் & பிபிஜி சங்கர் கொலை வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர். வட தமிழகத்தில் கார்ப்பரேட் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில்களில் ஆதிக்கம் செலுத்தினார்.
20 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பிரபல ரவுடி கும்பல் தலைவனான நாகேந்திரன், தனது மகன் அஸ்வத்தாமன் மூலம் தமிழகத்தில் தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்து வருகிறார். அவர் மீது 20 கொலை வழக்குகள் மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளன.
அவரது மகனும் முன்னாள் காங்கிரஸ் இளைஞரணி முதன்மை பொதுச்செயலாளருமான அஸ்வத்தாமன் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். செல்வப்பெருந்தகை தான் அஸ்வத்தாமனுக்கு இந்த பொறுப்பு கொடுத்தார். தொழிலதிபர்களிடம் வாங்கும் பணத்தை இவர்கள் பகிர்ந்துகொள்வார்கள்.
இந்தக் குழுக்களின் துணையுடன்தான் செல்வப்பெருந்தகை, இக்கொலைக்கு திட்டமிட்டிருக்கிறார்.
இந்த கொலை வழக்கில் இன்னும் செல்வப்பெருந்தகை ஏன் கைதாகவில்லை என்று சோஷியல் மீடியாவில் பொதுமக்கள் கேள்வியை முன்வைக்கின்றனர்.
செல்வப்பெருந்தகை காங்கிரஸ் மற்றும் ஆளும் கூட்டணியில் இருப்பதால் தான் அவரை கைது செய்ய போலீசார் தயங்குகின்றனர்.
அவரை கட்சியில் இருந்து நீக்கினால் தான், மக்கள் மத்தியில் காங்கிரஸ் நிலைத்து இருக்கும்” என்று பகுஜன் சமாஜ் பொதுச்செயலாளர் ஜெயசங்கர் தெரிவித்துள்ளார்.
இந்த கடிதம் காங்கிரஸில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பிரியா