டிடிவி தினகரனை என்டிஏ கூட்டணியில் சேர்க்க பாஜக முயற்சிப்பதில் தவறு இல்லை என இன்று (ஜனவரி 19) முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணியில் பாஜக இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அதிமுகவிலிருந்து விலகிய டிடிவி தினகரன் வரும் தேர்தலில் என்டிஏ கூட்டணியில் இணைவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் வரும் ஜனவரி 23 அன்று பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்திற்கு வைக்கப்பட்ட பேனரில் டிடிவி தினகரன் படம் இடம் பெற்றிருந்தது. இதைத் தொடர்ந்து, கடந்த சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், “நான் கூட்டணிக்கு தலைமை வகிக்காத நிலையில், நான் இடம்பெறும் கூட்டணி குறித்து உரியவர்கள் அறிவிப்பார்கள்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, பாஜகவினர் அதிமுகவிலிருந்து வெளியேறியவர்களை இணைக்க முயற்சிப்பது குறித்த கேள்விக்கு, “கூட்டணி தர்மத்தில் அவர்கள் ஏற்கனவே இருந்தவர்களை சேர்க்க நினைப்பது தவறில்லை. பிரிந்து சென்றவர்களை இணைப்பது பாஜகவின் பெருந்தன்மையைக் காட்டுகிறது. பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்க பாஜக முயற்சிப்பதில் தவறில்லை” என்றார்.
மேலும், “கூட்டணி தர்மத்திற்குள் தர்மயுத்தம் நடத்தியவர் வருவாரா?” என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “அதிமுகவில் மீண்டும் ஓ.பி.எஸ்.ஐ சேர்ப்பது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார்” என்று தெரிவித்தார்.
