கூட்டணிக்காக அதிமுக அலைகிறதா? தூக்கி போட்டு மிதிப்போம் – செல்லூர் ராஜூ எச்சரிக்கை!

Published On:

| By christopher

sellur raju warning to thiruma seeman

”அதிமுக கூட்டணிக்காக அலைந்ததாக வரலாறே கிடையாது. எங்கள் காதை கடித்தால், தூக்கி காலுக்கு கீழே போட்டு மிதிப்போம்” என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கடுமையாக பேசியுள்ளார்.

மதுரையில் நடைபெற்ற அதிமுக 54ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நேற்று (அக்டோபர் 24) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கட்சியினர் மத்தியில் பேசினார்.

ADVERTISEMENT

திருமாவளவன் அரசியல் சகாப்தம் முடிந்துவிட்டது!

அப்போது அவர், “50 சதவீதம் இட ஒதுக்கீட்டுக் கொடுத்த எம்.ஜி.ஆரை பார்த்து ‘அரசியல் செய்ய தெரியவில்லை, இவர்களால் தமிழ்நாடு கேட்டுப் போய்விட்டது’ என்று திருமாவளவன் பேசினார். எம்.ஜி.ஆர் பற்றி திருமாவளவன் பேசின நாளே அவரது அரசியல் சகாப்தம் முடிந்துவிட்டது. திருமாவளவன் என்ற நற்பெயரை அவரே கெடுத்துக் கொண்டார். முதன்முதலில் ஏற்றத்தாழ்வை ஒழித்து 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி, அதன் வாரிசுகளுக்கு 69 சதவீதம் வாங்கிக் கொடுத்த அரசியல் நிலைப்பாடு அதிமுக ஆட்சியில்தான்.

தொட்டில் குழந்தை திட்டம், தாலிக்கு தங்கம் திட்டம், மடிக்கணினி, சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அதிமுக ஆட்சி கொண்டு வந்தது. தந்தை பெரியார் இயக்கத்தால் சமூக நீதி காத்த வீராங்கனை என்று பாராட்டப்பட்டவர் ஜெயலலிதா. அவரைப் பார்த்து உயர்ந்த சாதியில் இருந்து வந்தவர் என சில நாட்களுக்கு முன்னதாக சீமான் கேலி செய்கிறார்.

ADVERTISEMENT

மீண்டும் செங்கலை தூக்கி காண்பிப்பாரா?

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தன்னைத் தானே தலைவர் என்று சொல்லிக் கொண்டுள்ளார். அவரை யாரும் தலைவராக ஏற்றுக் கொள்ளவில்லை. என்னென்னமோ நடித்து பார்க்கிறார். உதயநிதி ஸ்டாலினை ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின் நாயகனாக மக்கள் பார்க்கிறார்கள்.

கடந்த தேர்தலில் ஒரு செங்கலை காண்பித்து ‘எங்கே எய்ம்ஸ் மருத்துவமனை?’ என்றார். நீட் தேர்வு ரத்து ரகசியம் என்று சொன்னார். இப்போது மீண்டும் வந்து செங்கலை தூக்கி உதயநிதி காண்பிப்பாரா? அப்படி காண்பித்தால் நம்ம ஆட்களும் செங்கலை தூக்க ஆரம்பித்து விடுவார்கள்.

ADVERTISEMENT

அதிமுககாரன் இழிபிறவி கிடையாது!

நாங்கள் கூட்டணிக்காக அலையாய் அலைவதாக சொல்கிறார்கள். நாங்கள் அலைந்ததாக வரலாறே கிடையாது. அதிமுக ஒருபோதும் யாருடனும் கூட்டணி வைத்துக் கொள்ளும்படி அலைந்ததில்லை அதிமுக தொண்டர்கள் மாற்றுக்கட்சியின் கொடியைத் தூக்கியதாக வரலாறே கிடையாது. அடுத்த கட்சிக் கொடியை தூக்கிப் பிடிக்கும் அளவுக்கு அதிமுககாரன் இழிபிறவி கிடையாது.

அதிமுக எந்த நேரத்திலும், எந்த சூழ்நிலையிலும் யாரையும் வம்பாக கூட்டணிக்கு அழைத்தது கிடையாது. எங்களுக்கு துணையாக தமிழக மக்களை காப்பாற்ற யார் துணை வந்தாலும் அவர்களை தூக்கிக் கொண்டாடுவோம். நான் இப்போதும் சொல்கிறேன். அதிமுக எப்போதும் யாருக்கும் துரோகம் இழைத்தது கிடையாது.

நண்பன் என்றால் ‘நண்பேண்டா’ என்று சொல்லி, நண்பனுக்கு உயிரையே கொடுப்போம். தோழனுக்கு தோள் கொடுப்போம். அதே தோழன் காதை கடித்தால், தூக்கி கீழே போட்டு மிதிக்கவும் செய்வோம்; இதுதான் அதிமுக வரலாறு. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலங்களிலும் யாரும் எங்களுக்கு துரோகம் இழைத்தது கிடையாது. எங்கள் கூட்டணியில் இருந்த காங்கிரஸ், பாஜகவுக்கு உயிரைக் கொடுத்த உழைத்தவர்கள்தான் அதிமுக தொண்டர்கள்” என்று அவர் பேசினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share