அதிமுக மயில்…திமுக வான்கோழி: செல்லூர் ராஜூ புது விளக்கம்!

Published On:

| By Minnambalam

தமிழ்நாட்டில் அதிமுக மயில் போன்றது. திமுக வான்கோழி. மயில் ஆடினால் தான் அழகாக இருக்கும். வான்கோழி ஆடினால் அழகாக இருக்காது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராய மரணங்கள், சட்டம் ஒழுங்கு சீர்குலைவினால் முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடத்தப்பட்டது. மதுரையில் மதுரை மாநகர் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ADVERTISEMENT

ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, “திமுக ஆட்சிக்கு வந்தாலே கள்ளச்சாராய உயிரிழப்புகள் வந்து விடுகின்றன. ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டில் முதல்வரின் மருமகனும் மகனும் 30 ஆயிரம் கோடி ஊழல் செய்திருப்பதாக முன்னாள் நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் உண்மையை பேசியதால் அவருக்கு பதவி பறிக்கப்பட்டு தற்பொழுது பல் பிடுங்கப்பட்டு அமைச்சரவையில் கடைசி அமைச்சராக இருந்த மனோ தங்கராஜின் பதவி தற்பொழுது அவருக்கு வழங்கப்பட்டு உள்ளது.

ஆனாலும் தான் பாரம்பரியக் குடும்பத்தைச் சேர்ந்தவன் பதவி முக்கியமில்லை கொள்கையின் அடிப்படையிலேயே செயல்படுவேன் என்று பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்து இருக்கிறார்.

ADVERTISEMENT

தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் ரோம் நகரம் தீப்பிடித்து எரிந்த பொழுது மன்னர் பிடில் வாசித்தது போல நமது முதல்வர் ஜப்பான், சிங்கப்பூருக்கு சென்று போட்டோ ஷூட் நடத்திக் கொண்டு இருக்கிறார். ஆனால் திமுகவினர் பிரதமர் மோடியை கிண்டல் கேலி செய்தனர். ஆஸ்திரேலிய பிரதமர் நமது பிரதமர் மோடியைப் தி பாஸ் என்கிறார், பப்புவா நாட்டின் பிரதமர் பிரதமரின் காலில் விழுந்து ஆசி பெறுகிறார்.

தமிழ்நாட்டில் அதிமுக மயில் போன்றது. திமுக வான்கோழி. மயில் ஆடினால் தான் அழகாக இருக்கும். வான்கோழி ஆடினால் அழகாக இருக்காது.

ADVERTISEMENT

திமுக ஆட்சி என்றாலே வில்லங்கமும் பிரச்சனையுமாக உள்ளது. திமுக கூட்டணி கட்சிகள் ஆட்சியில் நடக்கின்ற சட்டவிரோத செயல்களை கண்டிக்காமல் இருக்கின்றன.

திருமாவளவன் மட்டுமே சாராய உயிரிழப்புகளுக்கு எதிராக குரல் கொடுத்து இருக்கிறார். மற்ற ஆளும் கூட்டணி கட்சிகள் வாயில் திண்டுக்கல் பூட்டை போட்டு இருக்கிறார்கள். இனி நமக்கு போராட்ட களம் தான். போராடி 2024 ஆம் ஆண்டு வெற்றி பெற வேண்டும்.

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களையெல்லாம் திமுக கொண்டு வந்தது போல திறப்பு விழா நடத்துகின்றனர்.

கண்டன ஆர்ப்பாட்டம் வெயிலில் நடைபெறுவதால் தொண்டர்களின் தாகம் தீர்ப்பதற்காக நாங்கள் கள்ளச்சாராயம் கொடுப்பதில்லை மோரும், சர்பத்தும் மட்டுமே ஏற்பாடு செய்திருக்கிறோம். கட்சியினர் அதனை அருந்தி வெயிலில் இருந்து இளைப்பாற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.

செல்வம்

மல்யுத்த வீராங்கனைகளுக்கு அடுத்த ஷாக் கொடுத்த டெல்லி போலீஸ்!

“தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனை அமோகம்”: சி.வி.சண்முகம்

Photo of author
Minnambalam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share