திருமா ஆதங்கம்… முதல்வருக்கு டெடிகேட்… செல்லூர் ராஜூ பேட்டி!

Published On:

| By Selvam

விசிக கொடியை பொது இடங்களில் நம்மால் ஏற்றமுடியவில்லை என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்த நிலையில், அவரது பேச்சை முதல்வர் ஸ்டாலினுக்கு டெடிகேட் செய்கிறேன் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று (மார்ச் 2) தெரிவித்துள்ளார். Sellur Raju criticize Dmk

பிப்ரவரி 28-ஆம் தேதி சென்னை கொட்டிவாக்கத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கூட்டணி கட்சி தலைவர்கள் மத்தியில் பேசிய ஸ்டாலின், “திமுக கூட்டணியில் கருத்து மோதல்கள் இருக்கலாம். ஆனால், கருத்தியல் ரீதியாக கூட்டணியில் நாங்கள் வலுவாக இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

ஸ்டாலின் இப்படி பேசிய அடுத்த நாளே விசிக கட்சி கொடியை பொதுஇடங்களில் ஏற்றமுடியவில்லை என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

சென்னையில் நேற்று நடைபெற்ற தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல் திட்டம் சட்டம் வலுப்படுத்துதல் சமூக அமைப்புகள் மாநாட்டில் திருமாவளவன் கலந்து கொண்டார்.

இந்த மாநாட்டில் பேசிய திருமாவளவன், “இன்றைக்கு விசிகவில் 4 எம்.எல்.ஏ-க்கள், 2 எம்.பி-க்கள் இருக்கிறோம். இருப்பினும் விசிக கொடியை ஏற்றுவதில் நமக்கு சிக்கல் இருக்கிறது.

அவ்வளவு எளிதாக நம்மால் ஒரு இடத்தில் விசிக கொடியை ஏற்றமுடிவதில்லை. நாம் கொடியேற்றுகிற இடத்தில் தான் அதிகாரிகள் சட்டம் பேசுவார்கள். வேறு எந்த இடத்திலும் கேட்கமாட்டார்கள். பேனர் வைத்தால் உடனடியாக அகற்றிவிடுவார்கள். இன்னும் அரசியல் ரீதியாக நாம் வலிமை பெற வேண்டிய தேவை இருக்கிறது” என்று தெரிவித்தார்.

இதுதொடர்பாக மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜூவிடம் கேட்டபோது, “திருமாவளவன் பேச்சை கொள்கை கூட்டணி என்று சொல்லும் முதல்வர் ஸ்டாலினுக்கு டெடிகேட் செய்கிறேன்” என்று பதிலளித்தார். Sellur Raju criticize Dmk

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share