சென்னை மாதவரத்தில் தாய்ப்பாலை பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்த கடைக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இன்று (மே 31) சீல் வைத்தனர்.
மாதவரத்தில் தாய்பால் விற்பனை:
சென்னை மாதவரம் பகுதியைச் சேர்ந்த முத்தையா என்பவர், சட்டவிரோதமாக தாய்ப்பாலை பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
“இந்திய உணவு சட்டம் 2006ன் படி, தாய்ப்பாலை பதப்படுத்துவதும், விற்பனை செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, வணிகரீதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளக்கூடாது” என இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவிற்கு மாறாக, மாதவரத்தில் தாய்ப்பாலை பாட்டில்களில் வைத்து வணிகரீதியாக விற்பனை செய்ததற்காக முத்தையா என்பவரது கடைக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
மேலும், விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 50 தாய்ப்பால் பாட்டில்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து சோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
கடைக்கு சீல்:
திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி போஸ் தலைமையில் மாதவரம் பகுதியில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இதுத்தொடர்பாக பேசிய திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி போஸ், “கடந்த 10 நாட்களுக்கு முன்பாக மாதவரம் கே.கே.ஆர்.கார்டன் தெருவில் தாய்ப்பால் பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறைக்கு தகவல் கிடைத்தது.
நாங்கள் கடந்த ஒரு வாரமாக இதுத்தொடர்பான விசாரணையில் ஈடுபட்டு வருகிறோம். ஆனால், எந்தவித தகவலும் எங்களுக்கு கிடைக்கவில்லை.
முத்தையா என்பவருக்கு சொந்தமான இந்த கடையில் புரோட்டீன் பவுடர் உணவு பாதுகாப்புத்துறையில் அனுமதி பெறப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இந்த கடையில் திடீர் சோதனையில் ஈடுபட்டதில், பாட்டில்களில் அடைக்கப்பட்ட தாய்ப்பால் பறிமுதல் செய்யப்பட்டது.
சில பாட்டில்களில் தாய்ப்பால் கொடுத்த தாய்மார்களின் பெயரும், எந்த தேதியில் இந்த தாய்ப்பால் கொடுக்கப்பட்டது என்பதும் குறிக்கப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட பாட்டில்களை உணவு பாதுகாப்புத்துறை பகுப்பாய்வு கூடத்திற்கு ஆய்விற்காக அனுப்பி உள்ளோம். மத்திய உணவுப்பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு உத்தரவின் படி, தாய்ப்பாலை சந்தைப்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.
ஆய்வு முடிவின் அடிப்படையில், உணவு பாதுகாப்புத்துறை ஆணையரிடம் அறிக்கை சமர்பிக்கப்பட்டு கடையின் உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இந்த கடைக்கு யார் யாரிடம் இருந்து தாய்ப்பால் பெறப்பட்டுள்ளது என்பது தொடர்பான ஒரு நோட்டை தற்போது கைப்பற்றி உள்ளோம். அதில் உள்ள பெண்களின் கைப்பேசிக்கு அழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிலர் அழைப்பை ஏற்கவில்லை.
இந்த நோட்டில் உள்ள பெயர்கள் அடிப்படையில் பார்த்தால் சுமார் 50 பெண்களிடம் இருந்து தாய்ப்பால் பெறப்பட்டுள்ளது. கடந்த 3 மாத காலமாக இந்த விற்பனை நடைபெற்று வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.
தாய்ப்பால் எவ்வளவு விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனால், 100 கிராம் தாய்ப்பால் பாட்டில்களில் ரூ.500க்கு விற்பனை செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பால் என்பது எளிதில் கெட்டுப்போகும் தன்மையுடைய பொருளாகும். பால் எவ்வாறு பதப்படுத்தப்பட்டது என்பது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.
இதுத்தொடர்பாக, கடையின் உரிமையாளர் முத்தையா பேசியதாவது, “சேவை மனப்பான்மையுடன் தான் இந்த தாய்ப்பால் பெறப்பட்டது. இதுவரை 3 பேரிடம் இருந்துதான் இந்த தாய்ப்பால் பெறப்பட்டுள்ளது.
பெறப்பட்ட எந்த தாய்ப்பாலும் விற்பனை செய்யப்படவில்லை. யுனிசெஃப் கூற்றின்படி, தாய்ப்பால் இல்லாத பட்சத்தில், மாற்றுத்தாய் மூலம் குழந்தைகள் தாய்ப்பால் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களுக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தான் மத்திய அரசு தாய்ப்பால் விற்பனையை தடை செய்து இருப்பது தெரியவந்தது. அதன் தொடர்ச்சியாக, நாங்கள் தாய்ப்பால் விற்பனையை நிறுத்திவிட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.
வெளியான அதிர்ச்சி தகவல்:
இதனைத் தொடர்ந்து, தாய்ப்பாலை விற்பனை செய்த கடையின் உரிமையாளர் முத்தையாவை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
முத்தையாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சென்னை அமைந்தகரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை மருத்துவர்களுடன் இணைந்து தாய்ப்பால் விற்றது தெரியவந்துள்ளது.
மேலும், குறைந்தவிலையில், தாய்ப்பாலை மருத்துவமனைக்கு அளித்தும், அங்கு அதிக விலைக்கு தாய்ப்பால் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அரசு செவிலியர் ஒருவர் மூலம் பல தாய்மார்களிடம் இருந்து தாய்ப்பால் பெற்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுத்தொடர்பாக தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சரத்குமார் திரைவாழ்வில் திருப்புமுனை தந்த ‘சேரன் பாண்டியன்’!