திருப்பரங்குன்றம் தீபம்- பெரியார் சிலை அருகே தீக்குளித்த நபர் உயிரிழப்பு- நயினார், அண்ணாமலை இரங்கல்

Published On:

| By Mathi

Thirupparankundram

திருப்பரங்குன்றம் மலை தீபத் தூணில் தீபம் ஏற்றாததைக் கண்டித்து தீக்குளித்த பூர்ண சந்திரன் உயிரிழந்துள்ளதற்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கையில், “திருப்பரங்குன்ற தீபத்தூணில் கார்த்திகை தீபமேற்ற உயர்நீதிமன்றமே உத்தரவிட்ட பிறகும் கூட, தங்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காகத் திமுக அரசு அதை செயல்படுத்த மறுத்ததைக் கண்டித்து, மதுரை நரிமேடு பகுதியைச் சேர்ந்த பூர்ணசந்திரன் என்பவர் மதுரை மாநகர் அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள பெரியார் சிலை அருகே தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்ட தகவலறிந்து சொல்லொண்ணா துயரத்தில் தவிக்கிறேன். திமுக அரசின் வீண் பிடிவாதத்திற்கு பலியானவரின் குடும்பத்தாருக்கு என்ன ஆறுதல் சொல்லித் தேற்றுவதென்றே தெரியவில்லை. “கடவுளே இல்லை எனச் சொல்லும் பெரியாரின் சிலை முன்பே நான் எனது உயிரை மாய்த்துக் கொள்கிறேன், அடுத்த ஆண்டிலாவது திருப்பரங்குன்றத்தில் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஒளிரட்டும்” என ஆடியோக்களை ஆதாரமாகப் பதிவு செய்துவிட்டுத் தற்கொலை செய்துகொண்ட திரு. பூர்ணசந்திரன் அவர்களது ஆன்மா எம்பெருமான் முருகனின் செவ்வொளியில் அமைதி பெறட்டும். தமிழர் வழிபாட்டு உரிமைகளை மீட்டெடுக்க காலங்காலமாக நாம் போராடி வருகிறோம், ஆயிரம் தடைகள் வந்தாலும் அத்தனையும் தகர்த்தெறிந்து இனியும் நாம் தொடர்ந்து போராடுவோம். நேர்கொண்ட பார்வையுடன், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளுடன், அறத்தின் துணை கொண்டு போராட்டக்களத்தில் நாம் கைகோர்த்து நிற்போம். ஆனால், எந்தவொரு கஷ்டத்திற்கும் தற்கொலை என்பது என்றைக்குமே தீர்வாகாது. எனவே, உலகத்தில் படைக்கப்பட்ட ஒவ்வொரு உயிரும் விலை மதிப்பற்றவை என்பதைக் கருத்தில் கொண்டு இனியும் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் தவிர்க்க நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டுமென உங்கள் அனைவரிடமும் சிரம் தாழ்ந்த கோரிக்கை விடுக்கிறேன்!” என கூறியுள்ளார்.

ADVERTISEMENT

இது தொடர்பாக அண்ணாமலை கூறியுள்ளதாவது: சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி மலை தீபத்தூணில் தீபம் ஏற்றுவதைத் தடை செய்த திமுக அரசைக் கண்டித்து, மதுரை மாநகர் நரிமேடு பகுதியை சேர்ந்த தீவிர முருக பக்தர், சகோதரர் பூர்ண சந்திரன், தீக்குளித்து உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது.

வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. நீதிமன்றங்களின் மீது நம் அனைவருக்கும் முழு நம்பிக்கை இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், இது போன்ற வருந்தத்தக்க முடிவை, சகோதரர் பூர்ண சந்திரன் அவர்கள் எடுத்திருப்பது மிகவும் வேதனையளிப்பதாக உள்ளது. ஒவ்வொருவரும், அவர்களது குடும்பத்தினருக்கு முக்கியம். இது போன்ற முடிவுகள், எப்போதும், எதற்காகவும் வேண்டாம் என்று அனைவரிடமும் பணிவாகக் கேட்டுக் கொள்கிறேன்.

ADVERTISEMENT

சகோதரர் பூர்ண சந்திரன் அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து தருமாறு, மதுரை பாஜக சகோதரர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

சகோதரர் திரு. பூர்ண சந்திரன் அவர்கள் ஆன்மா, முருகன் திருப்பாதங்களை அடைய வேண்டிக் கொள்கிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share