“ஆட்சி அதிகாரம் என்ற துண்டை உதறிவிட்டு களத்தில் ஒரு அண்ணாமலை அல்ல, 100 அண்ணாமலை வந்தாலும் சந்திப்பதற்கு தயாராக இருக்கிறோம்” என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். Sekarbabu condemned annamalai tasmac
டாஸ்மாக் விவகாரத்தில் மதுவிலக்கு, ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் பதவி விலக வலியுறுத்தி தமிழக பாஜக சார்பில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை போலீசாரால் நேற்று (மார்ச் 17) கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து நேற்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “டாஸ்மாக்கில் பல ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது குறித்து முதல்வர் ஸ்டாலினை வீடு தேடி சென்று சந்திப்பேன். தமிழகத்தில் உள்ள 5,000 டாஸ்மாக் கடைகளிலும் முதல்வர் ஸ்டாலின் போட்டோவை ஆணி அடித்து மாட்டுவோம்” என்று பேசியிருந்தார்.
இதுதொடர்பாக சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த சேகர்பாபுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சேகர்பாபு,
“திமுக என்பது மொழி போராட்டம், எமெர்ஜென்சியை கண்ட இயக்கம். இந்த இயக்கத்தை பிளவுபடுத்துகின்ற சக்திகளை மீறி வளர்ந்த இயக்கம். தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லை என்றாலும், கொள்கைக்காக வீறுகொண்டு தமிழக மண்ணில் நிலைத்துநின்ற இயக்கம். தற்போது நாங்கள் ஆட்சிக்கட்டிலில் இருப்பதால் கையில் ஆட்சி என்ற கண்ணாடியை வைத்துக் கொண்டிருக்கிறோம். அதனால் பாதுகாப்பாக அந்த கண்ணாடி தொட்டிக்கு சேதாரம் வராமல் நடந்து கொண்டிருக்கிறோம்.
திமுக என்ற வாள் எப்போது போர் வருகிறதோ, அப்போது உறையில் இருந்து வெளிவரும் என்பதை அண்ணாமலை போன்றவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம். தமிழக மண்ணில் அனைத்து போராட்டங்களிலும் களத்தில் நின்று கட்சியை நடத்திக்கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். திமுக தொண்டர்களை ஒரு அடி யாராவது தாக்க முற்பட்டால், 10 அடி முன்னேறி அவர்களை காப்பதற்கு தயாராக இருக்கிறார்.
யோகி ஆட்சி நடைபெறும் உத்தரபிரதேசத்தில் உள்ள டாஸ்மாக்கில் மோடி படத்தை ஆணி அடித்து அண்ணாமலை மாட்டட்டும். நாங்கள் வேண்டுமென்றால் ஆணி சப்ளை செய்கிறோம். அதற்கு பிறகு அவர் இங்கே வரட்டும்.
மாலை ஆறு மணி ஆகிவிட்டது. மூன்று விமானங்களை நான் மிஸ் செய்துவிட்டேன் என்னை வெளியே விடுங்கள் என்று போலீஸ் அதிகாரிகளிடம் அண்ணாமலை சண்டையிடுகிறார். ஐந்து மணி நேரம் கூட போலீஸ் காவலில் இல்லாத அண்ணாமலை, நாட்டிற்காக எப்படி போராடுவார்.
எங்கள் முதல்வர் திருமணமான ஓராண்டு கால இளமை பருவத்தை மிசா கொடுமையில் சிறையில் கழித்தவர். அண்ணா சொன்னது போல் அமைச்சர் என்பது தோளில் போட்ட துண்டு. கொள்கை என்பது தான் எங்களுக்கு இடுப்பில் கட்டிய வேட்டி. ஆட்சி அதிகாரம் என்ற துண்டை உதறிவிட்டு களத்தில் ஒரு அண்ணாமலை அல்ல, 100 அண்ணாமலை வந்தாலும் சந்திப்பதற்கு தயாராக இருக்கிறோம்” என்றார். Sekarbabu condemned annamalai tasmac