அண்ணாமலைக்கு திமுக தொண்டர் போதும் : சேகர்பாபு சவால்!

Published On:

| By Minnambalam Desk

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை திமுகவின் சாதாரண தொண்டரை நிறுத்தி தோற்கடிப்போம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். sekarbabu challenge to annamalai

தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அறநிலையத் துறை மூலமாக கோயில்கள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அறநிலையத் துறை மீது பாஜக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. எனினும், தமிழகத்தில் 1000 கோயில்களுக்கு மேல் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது என்றும், பல ஆயிரம் கோடி கோயில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன, திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன என திமுக அரசு விளக்கம் அளித்துள்ளது.

ADVERTISEMENT

இதனிடையே உதவாக்கரை துறையாக அறநிலையத்துறை திகழ்ந்து வருகிறது என்றும், கோயில் காணிக்கையாக வரும் தங்கத்திற்கு உரிய கணக்குகள் இல்லை என்றும் குற்றம்சாட்டிய அண்ணாமலை, பாஜக ஆட்சிக்கு வந்த உடன், அறநிலையத் துறை ஒழிக்கப்படும் என சூளுரைத்து வருகிறார்.

 இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “அறநிலையத் துறையில் நலத்திட்டங்கள் நடைபெறுவதும், நாளுக்கு நாள் கோயில்களுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை கூடுவதும், எங்கு பார்த்தாலும் குடமுழுக்குகள் நடைபெறுவதும் எப்படி பாஜகவினருக்கு வயிற்றெரிச்சலை கிளப்பாமல் இருக்கும்?

ADVERTISEMENT

அண்ணாமலை போல ஆன்மீகத்தை வைத்து அரசியல் நடத்தலாம் என்று நினைப்பவர்கள், அதற்கு இடமில்லை என்பதால் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். திமுக என்பது அடிக்க அடிக்க உயரும் பந்து போன்றது. ஆகவே, பாஜகவினர் அடித்துக்கொண்டே இருக்கட்டும்.. திமுகவினர் இன்னும் உற்சாகத்துடன் வீறுநடை போடுவார்கள். 2026 சட்டமன்றத் தேர்தலில் அண்ணாமலை வெற்றிபெற்று முதலில் சட்டமன்ற உறுப்பினராக வரட்டும் பார்க்கலாம்” என்று தெரிவித்தார்.

சட்டமன்றத் தேர்தலில் அண்ணாமலை நிற்க வேண்டும் என சொல்கிறீர்களா என்ற கேள்விக்கு, “இதுவரை தேர்தலில் போட்டியிடவில்லை என்றால் அழைக்கலாம். ஏற்கனவே தேர்தலில் போட்டியிட்டுள்ளார் அல்லவா? அண்ணாமலையை தேர்தலில் நிற்கச் சொல்லுங்கள். தயாராக இருக்கிறோம். திமுகவின் சாதாரண தொண்டரை நிறுத்தி அண்ணாமலையை தோற்கடிப்போம்” என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT

முன்னதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது தொகுதியான சென்னை கொளத்தூரில் திமுக சார்பில் வழங்கப்படும் அன்னதான திட்டமான அமுதக் கரங்கள் திட்டத்தை அவரது மனைவி துர்கா ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சேகர்பாபு இவ்வாறு தெரிவித்தார். sekarbabu challenge to annamalai

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share