அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த கே.ஏ. செங்கோட்டையனை அமைச்சர் சேகர்பாபு இன்று (நவம்பர் 26) சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, திமுகவில் சேருமாறு செங்கோட்டையனுக்கு சேகர்பாபு அழைப்பு விடுத்ததாகவும் ஆனால் செங்கோட்டையன் ‘பிடி கொடுக்காமல்’ இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை ஒன்று சேர்க்க வேண்டும் என குரல் கொடுத்தார் செங்கோட்டையன். அத்துடன் ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரையும் அவர் சந்தித்து பேசினார். இதனால் அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டார்.
இதனையடுத்து நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் நாளை நவம்பர் 27-ந் தேதி செங்கோட்டையன் இணைய முடிவு செய்தார். இந்த செய்தியை நாம் நமது மின்னம்பலத்தில் முதன் முதலாக வெளியிட்டோம். அத்துடன் தமது எம்.எல்.ஏ. பதவியை செங்கோட்டையன் இன்று ராஜினாமா செய்கிறார் எனவும் தெரிவித்திருந்தோம்.
இந்த நிலையில் சட்டப்பேரவை தலைவர் அப்பாவுவை இன்று நேரில் சந்தித்து தமது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை செங்கோட்டையன் வழங்கினார். அப்போது தவெகவில் இணைவது பற்றி செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். இதற்கு, இன்று ஒருநாள் பொறுத்திருங்கள் என பதிலளித்தார் செங்கோட்டையன்.
இதனிடையே செங்கோட்டையனை திமுகவில் இணைய அழைப்பு விடுக்கும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. திமுகவின் மூத்த தலைவர்கள் நேற்று இரவே செங்கோட்டையனை தொடர்பு கொண்டு பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு அலுவலகத்தில், செங்கோட்டையனை அமைச்சர் சேகர்பாபு இன்று சந்தித்து பேசினார். இதன் பின்னர் செங்கோட்டையனை அவரது வீட்டிலும் சந்தித்து பேசினார் அமைச்சர் சேகர்பாபு.
ஆனாலும், திமுகவில் இணைவது தொடர்பான அழைப்புகளுக்கு எந்தவிதமான ’பிடியும்’ செங்கோட்டையன் கொடுக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
