அண்ணா அறிவாலயத்தில் ஒரு செங்கல்லை அண்ணாமலை தொட்டுப் பார்க்கட்டும் என அமைச்சர் சேகர்பாபு சவால் விடுத்துள்ளார். Sekar Babu Challenge Annamalai
மும்மொழிக் கொள்கையை ஏற்றால் தான் ரூ.2,152 கோடி கல்வி நிதியை விடுவிப்போம் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியது தமிழகத்தில் கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளது. இது தொடர்பாக பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மோடி வந்தால் கெட் அவுட் மோடி என்று உதயநிதி சொல்வாராம். உதயநிதிக்கு சொல்கிறேன். நீ சரியான ஆளா இருந்தா சொல்லி பாரு என்று ஒருமையில் பேசியது சர்ச்சையை உண்டாக்கியது.
இதற்கு பதிலளித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஏற்கனவே அறிவாலயத்தை முற்றுகையிடுவேன் என்று அண்ணாமலை சொல்லி இருந்தார். தைரியம் இருந்தால் அண்ணா சாலை பக்கம் வர சொல்லுங்கள் என்று சவால் விடுத்தார். இதற்கு அண்ணாமலையோ, அண்ணா சாலைக்கு வரத் தயாராக இருக்கிறேன். இடத்தை குறிப்பிடுங்கள், தனியாக வருகிறேன். முடிந்தால் தடுத்துப் பாருங்கள் என்று பதிலடி கொடுத்தார்.
இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “அண்ணாமலை கர்நாடகாவில் போலீசாக இருந்தது போலவே தமிழ்நாட்டில் நினைத்துக் கொண்டு பேசுகிறார். அவர் கர்நாடகா போலீஸ் இல்லை. துணை முதல்வர் சொன்னதன் அர்த்தம் அண்ணா சாலை பகுதியில் தான் அண்ணா அறிவாலயம் அமைந்துள்ளது என்பதுதான். அண்ணாமலை அறிவாலயத்தின் செங்கல்லை பிடுங்கி எறியும் வரை ஓய மாட்டேன் என்று கூறியதற்கு பதிலாகவே உதயநிதி அவ்வாறு குறிப்பிட்டார்.
இப்போதும் சொல்கிறோம்.. அண்ணாமலைக்கு தெம்பிருந்தால் தைரியம் இருந்தால் அண்ணா சாலையில் அமைந்துள்ள அண்ணா அறிவாலயத்தில் ஒரு செங்கல்லையாவது தொட்டுப் பார்க்கச் சொல்லுங்கள். திமுக என்பது நீருபூத்த நெருப்பு இயக்கம். நெருப்பாற்றில் பயணித்த இயக்கம். நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அல்ல திமுக.
75 ஆண்டுகளைக் கடந்து திராவிட மாடல் ஆட்சி அமைத்துள்ள இரும்பு மனிதர் ஸ்டாலின் தலைமையிலான இயக்கம் இது. மிசா கொடுஞ்சிறையில் கொள்கைக்காக இருந்தவர். அவர் வழியில் வந்த லட்சக்கணக்கான தொண்டர்கள் இருக்கும் வரை ஓர் அண்ணாமலை அல்ல, ஓராயிரம் அண்ணாமலை வந்தாலும் ஒன்றும் செய்ய இயலாது. அண்ணாமலையின் இதுபோன்ற பேச்சுக்களால் திமுக என்னும் இயக்கம் இன்னும் வீறுபெறும்” என்று தெரிவித்தார். Sekar Babu Challenge Annamalai
