மிரட்டலின் அடிப்படையில் தான் சீமானுக்கு எதிரான புகாரை நடிகை விஜயலட்சுமி வாபஸ் பெற்றுள்ளார் என சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. seeman vijayalakshmi case judgement
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை காதலித்து திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டார் என்று விஜயலட்சுமி 2011ஆம் ஆண்டு புகார் அளித்தார். சீமான் மீது கடந்த ஆண்டும் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் விஜயலட்சுமி மீண்டும் புகார் அளித்தார். இதுதொடர்பாக சீமான் நேரில் ஆஜராக காவல்துறையினர் சம்மன் அனுப்பினர்.
ஆனால், வழக்கை திடீரென வாபஸ் பெற்றுக் கொண்ட விஜயலட்சுமி, இனி தான் சென்னைக்கே வர மாட்டேன் என்று கூறி பெங்களூரு சென்றுவிட்டார். இதனைத் தொடர்ந்து விஜயலட்சுமி அளித்த புகாரில் தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் சீமான் மனுதாக்கல் செய்தார்.
தனது மனுவில், “2011ஆம் ஆண்டு அளித்த புகாரை 2012ஆம் ஆண்டே விஜயலட்சுமி வாபஸ் பெற்றார். அதன் பேரில் வழக்கு விசாரணையை காவல் துறையினர் முடித்து வைத்தனர். இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு உள்ளது. அதனை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
இரு தரப்பு வாதங்களும் முடிந்த பிறகு அண்மையில் தீர்ப்பளித்த நீதிபதி இளந்திரையன், விஜயலட்சுமி தனது புகாரை திரும்பப் பெற்றாலும் கூட, பாலியல் வன்கொடுமை சட்டப் பிரிவின் கீழ் சீமானுக்கு எதிரான புகாரை காவல் துறை விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டார். சீமானின் மனுவையும் தள்ளுபடி செய்தார். இந்த தீர்ப்பின் முழு விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
அதில், “மிரட்டலின் அடிப்படையில் தான் சீமானுக்கு எதிரான புகாரை விஜயலட்சுமி திரும்பப் பெற்றுள்ளார். பாலியல் வன்கொடுமை புகார் என்பது தீவிரமானது. அதனை தன்னிச்சையாக திரும்பப் பெற முடியாது. விஜயலட்சுமி தனது வாக்குமூலத்தில் கூறியுள்ள புகார்கள், சீமானுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் விதத்தில் உள்ளன. வழக்கை ஆராய்ந்ததில் விஜயலட்சுமிக்கு சீமான் மீது எந்த காதலும் இல்லை. குடும்பம் மற்றும் திரைத் துறை பிரச்னை காரணமாக சீமானை விஜயலட்சுமி குடும்பத்தினர் அணுகியுள்ளனர்.
சீமான் வற்புறுத்தியதால் தான் ஆறு முறை கருக்கலைப்பு செய்தேன் எனவும், தன்னிடம் இருந்து சீமான் பெருந்தொகையை பெற்றுள்ளதாகவும் விஜயலட்சுமி புகாரில் தெரிவித்துள்ளார்” என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. மேலும், புகார் தொடர்பான விசாரணையை 12 வாரங்களுக்குள் நடத்தி முடிக்க வேண்டும் எனவும் காவல் துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.