கள்ளச்சாராய சம்பவத்தில் சிபிஐ விசாரணை கோரி உண்ணாவிர போராட்டம் மேற்கொண்டு வரும் அதிமுகவுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (ஜூன் 27) ஆதரவு தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் சிபிஐ விசாரணை கேட்டும், சட்டசபையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்தும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த போராட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, செங்கோட்டையன், எஸ்.பி வேலுமணி, ஆர்.பி உதயகுமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவின் சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்து ஆதரவு தெரிவித்தார்.
இந்தநிலையில், உண்ணாவிரத போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (ஜூன் 27) ஆதரவு தெரிவித்துளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டுமென்ற அதிமுகவின் ஜனநாயக கோரிக்கையை நிராகரித்து, எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் சட்டப்பேரவை நடவடிக்கைகளில் பங்குபெற முடியாதபடி திமுக அரசு இடைநீக்கம் செய்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.
மக்களாட்சி முறைமையைத் தகர்த்து எதிர்கட்சியினரின் குரல்வளையை நசுக்கும் திமுக அரசின் எதேச்சதிகாரப்போக்கு அப்பட்டமான ஜனநாயகப்படுகொலையாகும்.
மத்திய பாஜக அரசின் ஜனநாயக விரோதச் செயல்பாட்டை மாறாமல் பின்பற்றும் திமுக அரசின் இக்கொடுங்கோன்மையை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் அதிமுகவினர் மேற்கொண்டுவரும் பட்டினி அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தமது முழு ஆதரவினைத் தெரிவித்து, ஜனநாயகம் தழைக்க துணைநிற்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
சீமான் ஆதரவு தெரிவித்ததையடுத்து நாம் தமிழர் கட்சியின் பொருளாளர் ராவணன், வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் சங்கர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்து எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ள நிலையில், அதிமுக தங்களுக்கு ஆதரவு தர வேண்டும் என்று பிரச்சார பொதுக்கூட்டத்தில் சீமான் வெளிப்படையாக கோரிக்கை வைத்திருந்தார்.
இந்தநிலையில், அதிமுக உண்ணாவிர போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அடேங்கப்பா… வைரலாகும் ஆனந்த்-ராதிகா திருமண அழைப்பிதழ் வீடியோ!
“ரூ.100 கோடியில் விளையாட்டு உபகரணங்கள்” – உதயநிதி குட் நியூஸ்!

Comments are closed.