வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (செப்டம்பர் 1) தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை ஆரம்பித்துள்ளார். அண்மையில் அக்கட்சியின் கொடி மற்றும் பாடலை விஜய் அறிமுகப்படுத்தினார். வரும் செப்டம்பர் 23-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்துவதற்காக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் காவல்துறையிடம் அனுமதி கேட்டுள்ளார்.
விஜய் கட்சி ஆரம்பித்ததில் இருந்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். இதனால் 2026 சட்டமன்ற தேர்தலின் போது விஜய்யின் தவெகவுடன் நாம் தமிழர் கூட்டணி அமைத்து தேர்தலில் களமிறங்க வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், நாதக தனித்து போட்டியிடும் என்று சீமான் இன்று தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, தவெக-வுடன் நாம் தமிழர் கூட்டணி அமைக்குமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த சீமான், “2026 தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். தற்போது 60 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளேன். மற்ற தொகுதி வேட்பாளர்களையும் தேர்வு செய்து வருகிறேன்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய சீமான், “கார் ரேஸ் என்பது மேல்தட்டு மக்களின் விளையாட்டு. நகரின் மையப்பகுதியில் ஏன் பந்தயத்தை நடத்த வேண்டும்? அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பணம் கொடுக்க காசில்லை என்கிறார்கள். ஆனால், கார் ரேஸ் நடத்த மட்டும் பணம் எங்கிருந்து வருகிறது.
இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பு நாம் ஒரு நாட்டிற்கு மட்டும் தான் அடிமையாக இருந்தோம். தற்போது அந்நிய முதலீடு என்ற பெயரில் பல நாடுகளுக்கு அடிமையாக இருக்கிறோம்” என்றார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Comments are closed.