நாதகவில் இருந்து விலக காளியம்மாளுக்கு முழு சுதந்திரம் உண்டு என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (பிப்ரவரி 22) தெரிவித்துள்ளார். seeman reaction on ntk kaliyammal
தூத்துக்குடி மாவட்டம் மணப்பாட்டில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில், தற்போது நாம் தமிழர் கட்சி மாநில மகளிர் ஒருங்கிணைப்பாளராக உள்ள காளியம்மாள் பங்கேற்க உள்ளதாக அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டுள்ளது.
அதில் காளியம்மாளின் நாதக பொறுப்பு குறித்து எதுவும் குறிப்பிடாமல், சமூக செயற்பாட்டாளர் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அந்த அழைப்பிதழ் சமூகவலைதளங்களிலும் அதிகளவில் பகிரப்பட்டது.
இதனையடுத்து அவர் கட்சியில் இருந்து ஏற்கனவே விலகிவிட்டாரா என்ற சந்தேகம் எழுந்தது.

கடந்த சில மாதங்களாக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான அதிருப்தி காரணமாக அக்கட்சியின் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்கள் முதல் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் விலகி மாற்றுக் கட்சிகளில் இணைந்து வருகின்றனர்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் போது பிரச்சாரத்திற்காக காளியம்மாள், அந்த பக்கமே போகவில்லை. இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள அழைப்பிதழ் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக இன்று ஊடகங்களிடம் அவர் பேசுகையில், “நான் என் முடிவை விரைவில் அறிவிப்பேன்” என தெரிவித்தார்.
இந்த நிலையில் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம், காளியம்மாள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், ”நாம் தமிழர் கட்சியில் உள்ள அனைவருக்கு சுதந்திரம் உள்ளது. இன்னைக்கு என் பக்கத்தில் நிற்பவர் கூட நாளைக்கு செல்லலாம். கட்சிக்குள் வந்தால் ’நன்றி’ என தெரிவிப்போம், சென்றால் ‘வாழ்த்துகள்’ என தெரிவிப்போம்.
பருவக்காலங்களில் இலையுதிர் காலம் மாதிரி, தற்போது எங்கள் கட்சிக்கு களையுதிர் காலம்.
காளியம்மாளை நாம் தமிழர் கட்சிக்குள் அழைத்து வந்தது நான் தான். அவர் வேறு கட்சிக்கு செல்வது குறித்து முடிவெடுக்க முழு சுதந்திரம் உள்ளது. அதில் யாரும் தலையிட முடியாது” என சீமான் தெரிவித்துள்ளார்.