”அந்த கூலியும் தோல்வி… இந்த கூலியும் தோல்வி” – சீமான் காட்டம்!

Published On:

| By christopher

seeman pointout coolie movie as flop

“தனியார் நிறுவனத்திற்காக வேலைப் பார்க்க போகும் தூய்மை பணியாளர்களுக்கு அரசு ஏன் காலை உணவு கொடுக்கிறது?” என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் இன்று (ஆகஸ்ட் 16) செய்தியாளர்களை சந்தித்த சீமான் பேசுகையில், “தமிழக அரசின் 10 அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து பேரணி நடத்தியவர்கள் உண்மையில் தூய்மை பணியாளர்களா எனப் பார்க்க வேண்டும். தன்மானமிக்க யாராவது இந்த அரசுடன் போய் நிற்பார்களா?

தூய்மை பணியாளர்களை தனியாரிடம் ஒப்படைப்பதில் திமுக மற்றும் அதிமுக என இரண்டு அரசுகளுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் எம்பி நடத்தும் ராம்கி என்ற நிறுவனத்துக்கு தமிழ்நாட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பது வேண்டுதலா?

அந்த முதலாளிக்கு வேலைக்கு பார்க்கும் தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் கொடுப்பது யார்? அரசு கொடுக்கும் சம்பளத்தை கொடுக்க நடுவில் ஒரு ஏஜெண்ட் எதற்கு? அந்த வேலையைக்கூட செய்ய முடியாது என்றால் எதற்கு மாநகராட்சி தேர்தல்? எதற்கு ஒரு மேயர்? எதற்கு கவுன்சிலர்? இதெல்லாம் தண்டச்செலவு தானே?

ADVERTISEMENT

தூய்மைப்பணியாளர்களின் சம்பளம் மொத்தமே மாதத்திற்கு ரூ.70 கோடி தான் வரும். ஆனால் மாதத்திற்கு அரசு ரூ.270 கோடி ஒதுக்குவது ஏன்? அப்படியென்றால் ஆண்டுக்கு ரூ.3240 கோடி ஒதுக்குகிறது.

தனியார் நிறுவனத்திற்காக வேலைப் பார்க்க போகும் தூய்மை பணியாளர்களுக்கு அரசு ஏன் காலை உணவு கொடுக்க வேண்டும்? யாரு காசு அது? சோறு போடுகிறேன் சோறு போடுகிறேன் என்று சொல்லியே இந்த அரசு மக்களை ஏமாற்றுகிறது.

ADVERTISEMENT

பணி நிரந்தரம் என வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த நீங்கள், நான்கரை ஆண்டுகளாகியும் அதனை நிறைவேற்றவில்லை. பிறகு எப்படி இப்போது அறிவித்த வாக்குறுதிகள் மட்டும் நிறைவேறும் என நம்ப முடியும்?

இந்த நிலையில் அரசின் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து ஒரு பேரணி நடைபெற்றது. அதற்கு டைரக்சன் மேயர் தான். அவருக்கு சரியாக அது வரவில்லை. அதனை மேற்பார்வையிட்ட சேகர்பாபுவும் அந்த வேலையை சரியாக செய்யவில்லை. அதனால் அது பிளாப் ஆகிவிட்டது. அந்த கூலியும் காலி. இந்த கூலியும் காலி” என சீமான் பேசினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share