நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நட்பு சக்தி; ஆகையால் சீமானை விமர்சிக்கக் கூடாது என அக்கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
தமது சமூக வலைதளப் பக்கத்தில் வேல்முருகன் இன்று வெளியிட்ட பதிவு:
நாம் தமிழர் கட்சியிலிருந்து வெளியேறி தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் ஜெகதீச பாண்டியன் இணைந்த நாள் முதலாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை விமர்சித்து வந்தார்.
நாம் தமிழர் கட்சியானது தமிழ் தேசியம் பேசும் ஓர் அரசியல் கட்சி என்கின்ற வகையில் தமிழக வாழ்வுரிமை கட்சி அதனை ஓர் நட்பு சக்தியாக பார்த்து வருகிறது.
அதன் அடிப்படையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான விமர்சனங்களில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதை பல்வேறு கட்டங்களில் அவருக்கு அறிவுறுத்தினேன்.
ஆனால் அவர் மேற்கண்ட கருத்துக்களில் தனக்கு உடன்பாடு இல்லை என்று தெரிவித்ததன் அடிப்படையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியிலிருந்து மேற்கண்ட விமர்சனங்களை மேற்கொள்ள வேண்டாமென்றும் இதிலிருந்து வெளியேறி தாங்கள் மேற்கொள்ள விரும்பும் அரசியல் செயல்பாடுகளை தொடரலாம் என்ற எனது கருத்தின் அடிப்படையில் அவர் இன்று முதல் தமிழக வாழ்வுரிமைக் கட்சியிலிருந்து வெளியேறி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து செயல்பட விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
எனவே தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் மேற்கண்ட அவரது முடிவை நாகரிகமான முறையில் கடந்து செல்வதோடு அவர் மீதான எந்த விமர்சனங்களையும் சமூக ஊடகங்களில் வெளிப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
