விவசாயியை மீட்போம் : சீமான் சொன்ன கரும்பு சேதி!

Published On:

| By Aara

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடந்து முடிந்திருக்கிற நிலையில், வாக்கு எண்ணிக்கைக்காக ஜூன் 4-ஆம் தேதி வரை அரசியல் கட்சியினரும் பொதுமக்களும் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

இந்த இடைவெளியை பயன்படுத்தி அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது நிர்வாகிகளிடம் தேர்தல் பரப்புரை அனுபவம் பற்றியும், வாக்குப்பதிவு பற்றிய சாதக பாதகங்களையும் விவாதித்து வருகிறார்கள்.

இந்த வகையில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானும் தன்னுடைய நிர்வாகிகளிடம் கலந்துரையாடி வருகிறார்.

இது குறித்து நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான இனியன் ஜான் நம்மிடம் பேசுகையில்,

“அண்ணன் சீமான் தேர்தல் பரப்புரை களத்தில் சுற்றி சுழன்று முடித்திருக்கிறார். தேர்தல் அன்றே எங்களில் பலரிடமும் அலைபேசியில் உரையாடி அவரவர் தொகுதிகளில் வாக்குப்பதிவு சதவீதம் பற்றியும் நமக்கான வாக்கு பற்றியும் விசாரித்து அறிந்தார்.

பரப்புரை முடிந்து ஓய்வெடுக்காமல் எங்களையும் களைப்படைய விடாமல் தொடர்ந்து பேசி வருகிறார்.

எதிரிகளின் சதியால் எங்களுடைய கரும்பு விவசாயி சின்னம் அநியாயமாக பறிக்கப்பட்டது. தகுதி இல்லாத ஒருவர் கையில் அது சில தொகுதிகளில் ஒப்படைக்கப்பட்டது.

நீண்ட போராட்டத்துக்குப் பிறகு எங்களுக்கு ஒலிவாங்கி சின்னம் கிடைத்தது. அதையும் உடனடியாக நாங்கள் மக்களிடம் வேகமாக கொண்டு சேர்த்தோம். சில தொகுதிகளில் சுயேச்சை சின்னங்களுக்கு இடையில் ஒலி வாங்கி மைக் சின்னத்தை வைத்திருந்தார்கள். சில தொகுதிகளில் ஏற்கனவே நாங்கள் அடையாளப்படுத்தி இருந்த கரும்பு விவசாயி சின்னத்துக்கு பக்கத்தில் எங்கள் சின்னத்தை வைத்திருந்தார்கள்.

 

இந்தப் பின்னணியில் தான் வாக்குப்பதிவு சதவீதம் நமக்கு எப்படி வரும் என்று ஒவ்வொரு வேட்பாளரிடமும் உரையாடி இருக்கிறார் அண்ணன் சீமான்.

பொதுவாகவே நமக்கு தேர்தல் என்பது போராட்டம் தான். இந்த முறை நமக்கு அது இரட்டைப் போராட்டமாக மாறிவிட்டது. முதலில் சின்னத்துக்காக போராட்டம் பிறகு வெற்றிக்கான போராட்டம் என இரண்டு போராட்டங்களில் நாம் ஈடுபட்டோம்.

இந்த முறை உறுதியாக  பத்து விழுக்காடு வாக்குகளை தாண்டுவோம். மீண்டும் கரும்பு விவசாயி சின்னத்தை மீட்டெடுப்போம் என்று எங்களுக்கெல்லாம் தொடர்ந்து நம்பிக்கை அளித்து வருகிறார் அண்ணன் சீமான்” என குறிப்பிட்டார் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான இனியன் ஜான்.

வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே மாநிலம் தழுவிய நிர்வாகிகள் கூட்டத்தையும் கூட்டுவதற்கு தயாராகி வருகிறார் சீமான் என்கிறார்கள் நாம் தமிழர் கட்சியின் தலைமை வட்டாரங்களில்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-வேந்தன்

தேர்தல் பணி: விசாரணையைத் தொடங்கிய எடப்பாடி… எதிர்பார்க்கும் 3 தொகுதிகள்!

CSKvsLSG : சொந்த மைதானத்தில் முதல் தோல்வி… ருதுராஜ் விளக்கம்!

காங்கிரஸ் தாலியை பறிக்குமா? : மோடிக்கு பிரியங்கா காந்தி ஆவேச பதிலடி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share