தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சான் கதாநாயகனாக நடித்துள்ள படம், ‘பேரன்பும் பெருங்கோபமும்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது.
இந்த விழாவில் இயக்குநர்கள் எஸ்.ஏ. சந்திரசேகர், வசந்தபாலன், கரு.பழனியப்பன், ஆர்.கண்ணன், சுசீந்திரன், லட்சுமி ராமகிருஷ்ணன், சினேகன், சித்ரா லட்சுமணன், தேவயானி மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
அப்போது சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், ”பாலுமகேந்திராவின் பாசறையில் இருந்து வந்திருக்கும் சிவப்பிரகாஷ் இந்தப் படத்தை இயக்கி இருக்கிறார். முதல் படத்திலேயே இயக்குநர் சிவபிரகாஷுக்கு இசைஞானி இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சி.

தோனி எல்லா களத்திலும் சிக்சர் அடிப்பார். அதே போல் தான் இளையராஜா, எல்லா விதமான படத்திற்கும் இசையமைப்பார். தளபதி படத்திற்கு ஒருவரே இசையமைத்தார் என்று சொன்னால் உலகில் யாரும் நம்ப மாட்டாங்க. ராக்கம்மா கையத்தட்டு பாடலில் தேவாரம் பாடல் வரிகளை பயன்படுத்தி ஹீரோயினுக்கு எண்ட்ரி, சிறிது நேரத்தில் காட்டுக்குயிலு மனசுக்குள்ளே, அடுத்து சுந்தரி கண்ணால் ஒரு சேதி.. என்ற ஒரே படத்தில் எத்தனை விதமான பாடல்கள்…
அவருக்கு இசைஞானி என்கிற வார்த்தை கூட குறைவுதான். இசை இறைவன் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். அவரிடம் யார் எப்போது எந்த பாடல் கேட்டாலும் அருள்வார். உலகில் எத்தனையோ இசைக்கலைஞர்கள் இருந்தாலும் இளையராஜாவுக்கு இணை இல்லை.
என்னை முதன்முதலில் பார்த்தபோது என்னை உதவி இயக்குநர் என்று மணிவண்ணன் அறிமுகப்படுத்தினார். அதற்கு அவர் ’நான் புரொடக்சன் மேனேஜர்”என்று நினைத்தேன் என்று கூறினார்.
இயக்குநர் ஒரு திரைக்கதை எழுதினால் இளையராஜா தனது இசையால் இன்னொரு திரைக்கதை எழுதிக் கொண்டிருப்பார்.
எப்படி இலக்கிய உலகில் பாரதி வந்தாரோ, அது போல தான் இசை உலகில் இளையராஜா. அவர் ஒரு வரம். அந்த வகையில் இசை இறைவனின் ஆசி பெற்ற படம் பேரன்பும் பெருங்கோபமும் ” என்று சீமான் கூறினார்.