விவசாயி சின்னம் கிடைக்குமா? – நீதிமன்றம் ஏறும் சீமான்

Published On:

| By Selvam

நாடாளுமன்றத் தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தவரை கடந்த காலங்களைப் போல, இந்த நாடாளுமன்ற தேர்தலிலும் தனித்துக் களம் காண உள்ளது. நெல்லை, தென்காசி நாடாளுமன்ற தொகுதிகளுக்கு அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பாளர்களை அறிவித்துள்ளார்.

இந்தநிலையில், நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவை சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்யதா கட்சிக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

இதுகுறித்து சென்னை அண்ணா நகரில் இன்று (பிப்ரவரி 17) செய்தியாளர்களிடம் பேசிய சீமான்,

“தேர்தல் விதிமுறை மற்றும் தேர்தல் வரைவுப்படி பார்த்தால் கரும்பு விவசாயி சின்னம் எனக்கு தான் கிடைக்க வேண்டும்.

முன்னதாக தேர்தலில் போட்டியிடுவதற்கு விவசாயி ஏர் உழும் சின்னம், வண்டி சக்கரம், அரிக்கன் விளக்கு சின்னங்களை ஒதுக்கக்கோரி தேர்தல் ஆணையத்திடம் கேட்டேன். அது மாநில கட்சிக்கு கொடுத்திருக்கிறோம் அதனால் தர முடியாது என்று சொன்னார்கள்.

ஆனால், தற்போது பக்கத்து மாநிலத்தை சேர்ந்த புதிதாக கட்சி ஆரம்பித்தவருக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கியுள்ளார்கள். அவர் இந்த தேர்தலில் போட்டியிடுவாரா இல்லையா என்றே தெரியவில்லை.

தேர்தல் தேதி அறிவித்து ஒரு வாரத்திற்கு பிறகு தான் எனக்கு சின்னம் ஒதுக்கினார்கள். நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பதற்காக தான் வேறு ஒருவருக்கு சின்னத்தை ஒதுக்கியுள்ளார்கள். நாங்கள் வளர்ந்து வருவதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

நீதிமன்றம் உறுதியாக விவசாயி சின்னத்தை எங்களுக்கு ஒதுக்க உத்தரவிடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் என 6 தேர்தல்களை சந்தித்துள்ளோம். அதனால் தேர்தல் ஆணையம் எங்களுக்கு தான் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

தேர்தல் ஆணையத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இந்த பேச்சுவார்த்தை முடிவுக்கு வராவிட்டாலும், வரும் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம்” என்று தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மீண்டும் ஒரு கேப்டன் மாற்றம்… எந்த டீம்லன்னு பாருங்க!

தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share