என் வசனத்தை விஜய் பேசலாமா? – சீமான் காட்டம்

Published On:

| By Pandeeswari Gurusamy

தவெக தலைவர் விஜய், எழுதிக் கொடுப்பதை எல்லாம் பேசிவிட்டுப் போகக்கூடாது. இங்கு கேள்விகள் வரும். என் வசனத்தை நீங்கள் பேசக் கூடாது என சீமான் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தவெக தலைவர் விஜய் உங்களுக்கு அழைப்பு கொடுத்தாரா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “எனக்கு ஏன் அவர் அழைப்பு கொடுக்க வேண்டும்? என்ன கேள்வி இது? தம்பி எப்போது வந்தார் சொல்லுங்கள். நான் 16 வருடமாகக் களத்தில் நிற்கிறேன். யார் பெரியவன் என்று சொல்லுங்கள். கோட்பாட்டில், வயதில் யார் பெரியவர்? என்னைவிட அவர் எட்டு வயது சின்னவர். அனுபவம் முதல் எல்லாவற்றிலும் நான்தான் மூத்தவன். நான் கூப்பிட்டுத்தான் தம்பி வர வேண்டும். தம்பி கூப்பிட்டு அண்ணன் வரக் கூடாது” என்றார்.

ADVERTISEMENT

அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கினார். திமுகவை அண்ணா தொடங்கினார். எந்த ஒரு பின்பலமும் இல்லாமல் என்னைப் போல் தனியாகக் கட்சி ஆரம்பித்து ஒரு சதவிகிதம் கூட வாங்க முடியுமா என்று சேலத்தில் விஜய் பேசியது குறித்த கேள்விக்கு, “அது என் வசனம். அதைத் தம்பி எடுத்துப் பேசுகிறார். அதை அவர் பேசுவதற்கு என்ன இருக்கு? எப்படி அதைப் பேசுகிறார்?அண்ணா ஆரம்பித்த கட்சி வேறு ஒருவரிடம் இருக்கிறது. நீங்கள் எதற்கு அண்ணாவை எடுத்துக்கொண்டு வருகிறீர்கள்? அவர் ஆரம்பித்த கட்சியை ஒழிக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள். எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சி ஊழல் கட்சி என்றால் எம்ஜிஆர் யார்? நான் கேட்பதற்கு பதில் சொல்லுங்கள்.

உங்களுக்காவது ஒரு திரைப் பின்பலம் இருக்கு தம்பி. நீங்கள் ரசிகர் மன்றத்தைத் தொண்டர்களாக்கிக் கூட்டி நிற்கிறீர்கள். நான் அப்படி இல்லை. சாதாரண மக்கள் வந்து வந்து நின்று நின்று, இன்று 36,00,000 வாக்குகளைப் பெற்றுத் தனித்து நின்று அங்கீகாரத்தைப் பெற்று ஒரு கட்சியாக நிற்கிறேன். என் வசனத்தை நீங்கள் எடுத்துப் பேசக் கூடாது. நான்தான் சொல்ல வேண்டும். நீங்கள் தனித்து நிற்கவே இல்லை. களத்துக்கே வரவில்லை. நீங்கள் வருவது என்றால் 2024-ல் பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவை எதிர்த்து நின்றிருக்க வேண்டும். நீங்கள் விக்கிரவாண்டியிலும், ஈரோடு கிழக்கிலும் போட்டியிட்டிருக்க வேண்டும். ஏன் போட்டியிடலை? எழுதிக் கொடுப்பவர் எழுதிக் கொடுக்கிறானென்று பேசிவிட்டுப் போகக் கூடாது. இங்கு கேள்விகள் வரும். இது என்னோட வசனம். நீங்கள் தப்பாக எடுத்துப் பேசுகிறீர்கள். நான் பேச வேண்டியதை நீங்கள் பேசக் கூடாது” எனத் தெரிவித்தார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share