நடிகை கொடுத்த பாலியல் புகாரில் இன்று மாலை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜராகிறார். seeman appears valasaravakkam police
நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரில் நேற்று நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டில் வளசரவாக்கம் போலீசார் சம்மன் ஒட்டினர்.
அந்த சம்மன் சற்று நேரத்தில் கிழித்து எறியப்பட்டதும், சீமான் வீட்டு காவலாளி அமுல்ராஜ், டிரைவர் சுபாகர் கைது செய்யப்பட்டதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் என்னால் காவல் நிலையத்தில் ஆஜராக முடியாது… என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள் என்று கிருஷ்ணகிரியில் நேற்று (பிப்ரவரி 27) பேட்டி அளித்தார்.
தொடர்ந்து இன்று தர்மபுரியில் நடக்கும் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொள்ள சென்ற அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
“நீதிமன்றம் வழக்கை விசாரித்து முடிக்க 3 மாதம் அவகாசம் வழங்கியிருக்கிறது. ஆனால் மூன்றே நாட்களில் முடிக்க காவல் துறை அவசரம் காட்ட வேண்டிய தேவை என்ன?
அந்தம்மாவிடம் பெங்களூருவுக்கு சென்று விசாரித்துவிட்டு வந்துள்ளீர்கள். என்னை காவல் நிலையம் வா வா என்கிறீர்கள். என்னிடமும் இங்கு வந்து விசாரிக்கலாம் தானே?
வீட்டில் என் மனைவி இருக்கிறார். அவரை அழைத்து சம்மனை கையில் கொடுத்திருக்கலாம். கேட்டில் ஒட்டிவிட்டு செல்ல வேண்டிய அவசியம் என்ன? நான் என்ன தலைமைறைவாகவா இருக்கிறேன்” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்தசூழலில் இன்று (பிப்ரவரி 28) வளசரவாக்கம் காவல் நிலையத்துக்கு சென்ற சீமான் தரப்பு வழக்கறிஞர்கள், “சீமான் தர்மபுரியில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் இருப்பதால் வாய்தா வேண்டும்” என்று கேட்டனர்.
ஆனால், இது இரண்டாவது சம்மன் என்பதால் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று போலீசார் கூறினர்.
இதனால் வழக்கறிஞர்கள், சீமானை தொடர்பு கொண்டு இங்கிருக்கக்கூடிய சூழ்நிலையை தெரிவித்திருக்கின்றனர்.
இதையடுத்து, “இன்று மாலை 7 மணிக்கு மேல் காவல்நிலையத்தில் ஆஜராவதாக சொல்லிவிடுங்கள். உடனடியாக கிளம்ப முடியாது. தர்மபுரியில் இருந்து சேலம் விமான நிலையத்துக்கு வந்து, அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வருகிறேன். அங்கிருந்து வளசரவாக்கம் காவல் நிலையம் வருகிறேன்” என்று தனது வழக்கறிஞர்களிடம் சீமான் கூறியிருக்கிறார்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளில் உள்ள கட்சி பொறுப்பாளர்களுக்கு தகவல் சொல்லி, நாதக பெண் நிர்வாகிகளையும் சென்னைக்கு வர சொல்லியுள்ளார்.
காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகும் போது கட்சி பெண் நிர்வாகிகளும் திரளாக காவல் நிலையத்துக்கு வரவேண்டும் என்று சீமான் கூறியிருப்பதாக நாம் தமிழர் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
அதேசமயம் சீமானிடம் விசாரணை நடத்த போலீசார் கேள்விகளுடன் தயாராக இருக்கின்றனர். seeman appears valasaravakkam police