இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 35 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் அவர்களின் ஜனவரி மாத ஊதியம் பிடிக்கப்பட்டிருக்கிறது.
இந்தநிலையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை தொடர்பாக முதல்வர் நல்ல முடிவை எடுப்பார். அதனால் ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு, பணிக்குத் திரும்ப வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்தசூழலில் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளதாக இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து இன்று (ஜனவரி 31) வெளியிட்ட அறிவிப்பில், “இடைநிலை ஆசிரியர்கள் சமவேலைக்கு சமஊதிய போராட்டம் சார்ந்து இன்று (31-01-2026) பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிக்கை வெளியிட்டிருந்தார்கள்.
அதில் மூன்று நபர்கள் ஊதிய குழு அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்பட்டு இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு சரி செய்யப்படும் என்றதின் அடிப்படையிலும், நமது அரசு மற்றும் தமிழக முதல்வர் மீது நம்பிக்கை வைத்து நல்லதொரு முடிவு ஏற்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கேட்டுக் கொண்டதின் அடிப்படையிலும் மாணவர்களின் கல்வி நலன், நெடு நாட்களாக போராடிவரும் இடைநிலை ஆசிரியர்கள் உடல் நலனை கருத்தில் கொண்டு நல்லெண்ண அடிப்படையிலும் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது.
கற்றல் இடைவெளியை நீக்கி முன்பைவிட கற்பித்தல் பணியில் வெகு சிறப்பாக ஈடுபடுவோம்” என்று கூறியுள்ளனர்.
