பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் ஆகஸ்ட் 19ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கிறது.
வரலாற்று நாவலை தழுவி உருவாகும் ‘பொன்னியின் செல்வன்‘ படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்கியிருக்கிறார். இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை லைகா நிறுவனம் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் வெளியாகும் இப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.
இதன் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தின் முதல் பாடலான ’பொன்னி நதி பார்க்கணுமே’ பாடல் ஜூலை 31ம் தேதி ரிலீஸாகியது.
’காவிரியாள் நீர் மடிக்கு’ என்று தொடங்கும் இப்பாடலில், நீர் சத்தம் கேட்டதுமே நெல் பூத்து நிக்கும், உளி சத்தம் கேட்டதுமே கல் பூத்து நிக்கும், சோழத்தின் பெருமை கூற சொல் பூத்து நிக்கும் என சோழ தேசத்தின் பெருமையையும், பொன்னி நதி பெருமையையும் வந்தியத்தேவன் பாடும்படி வரிகள் அமைக்கப்பட்டிருந்தன.
ஏ.ஆர்.ரஹ்மான் பாடியிருக்கும் இப்பாடலை மூத்த பத்திரிகையாளரும் இலக்கியவாதியுமான இளங்கோ கிருஷ்ணன் எழுதியிருக்கிறார்.
இப்படம் மூலம் அவர், திரையில் முதன்முதலாகக் கால்பதித்து இருக்கிறார். இவருடைய முதல் பாடல் மூலமே பட்டிதொட்டி எங்கும் பேசும்படி உயர்ந்த நிலைக்கு சென்றார்.
இந்த நிலையில், அவர் பொன்னியின் செல்வன் படத்தில் எழுதியிருக்கும் இரண்டாவது பாடலான ‘சோழா… சோழா’ பாடல் வரும் ஆகஸ்ட் 19ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக லைகா தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, ’பொன்னி நதி பார்க்கணுமே’ பாடலைப் போன்று ’சோழா சோழா’ பாடலும் ரசிகர்கள் மத்தியில் நன்கு வைரலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெ.பிரகாஷ்
