2026 சட்டமன்றத் தேர்தலுக்கான என்.டி.ஏ கூட்டணி தொகுதி பங்கீடு ஒப்பந்தம் இன்று (மார்ச் 23) கையெழுத்தானது.
அதிமுக தலைமை அலுவலகத்துக்கு கூட்டணி தலைவர் வருகைத் தந்த நிலையில் பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 என தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இதன் பின் அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “கூட்டணி கட்சித் தலைவர்கள் காலையில் வந்தார்கள், மதியம் முடிவு செய்யப்பட்டது மாலையில் அறிவிக்கப்பட்டுவிட்டது. திமுகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையே 20 நாட்கள் வார்த்தை போர் நடந்தது. எந்த பத்திரிகையும் விவாதம் நடத்தவில்லை.
மக்கள் விரோத அரசு அகற்றப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் கூட்டணியின் நோக்கம்” என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிமுக அலுவலகம் வந்திருக்கிறார். இதை எப்படி பார்க்கிறீர்கள்?
அவர் வந்தது உங்களுக்கு கஷ்டமாக இருக்கிறதா… எதாவது ஒரு பிரச்சினையை எழுப்புகிறீர்கள். அதற்கு கூட்டணி தலைவர்கள் இடம் தரமாட்டோம். காங்கிரஸ் கட்சி எமர்ஜென்சி, மிசா எல்லாம் கொண்டு வந்தது. அவர்களுடன் கூட்டணி வைத்துள்ள திமுகவிடம் இந்த கேள்வியை நீங்கள் கேட்பதில்லையே.விசிகவுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுக்கு இன்னும் முடிவாகவில்லை. கடந்த முறை 6 தொகுதிகளில் போட்டியிட்டார்கள். இந்த முறை 5 சீட்டுக்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிடும்?
பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் சில கட்சிகளுக்கு நாங்கள் சீட் கொடுக்கவேண்டும். இதுகுறித்து பேசி முடித்த பின்னர் நாங்கள் அறிவிக்கிறோம். இன்று இரவுக்குள் எங்கள் கூட்டணியில் உள்ள பிற கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் என அறிவிக்கப்படும்.
டெல்லியில் தான் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடக்கிறது என்று ஆளும் கட்சி குற்றம்சாட்டியது. அதை சரி செய்யத்தான் இங்கு அறிவிக்கப்பட்டதா?
கனிமொழி எதற்காக டெல்லி சென்று காங்கிரஸ் கட்சி தலைவரை சந்தித்து பேசினார். கூட்டணி கட்சிகள் எல்லாம் ஆலோசனை செய்வது இயல்பு என்று எடப்பாடி பழனிசாமி கூற அப்போது குறுக்கிட்ட அன்புமணி ராமதாஸ், நான் ராஜ்யசபாவில் கையெழுத்திட போனேன். நான் யாரையுமே பார்க்கவில்லை என பதிலளித்தார்.
தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, எங்கள் கூட்டணி 210 இடங்களில் வெல்லும் எனவும் குறிப்பிட்டார்.
