நம் சமூகத்தில் பொதுவாக அறிவாளிகள் கஷ்டப்படுவார்கள் என்று இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் தெரிவித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘லவ்வர்’. இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்.
பிப்ரவரி 9-ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், “நம் சமூகத்தில் பொதுவாக அறிவாளிகள் கஷ்டப்படுவார்கள். அறிவாளியாக பிறந்தாலே நம்மூரில் சிக்கல் தான். சிந்திக்கிறான் என்றாலே அவனுடன் சேராதே என சொல்பவர்கள் தான் அதிகம்.
நிறைய யோசித்தால் நீங்கள் உங்களை தனிமைப்படுத்திக்கொள்வீர்கள். இதுபோன்ற அறிவாளிகள் வெற்றி பெறவேண்டும் என்பது தான் என்னுடைய இலக்கு. ஏனெனில், நல்ல சிந்தனையாளர்கள் வெற்றி பெற்றால் அந்த சமூகம் ஆரோக்கியமாக இருக்கும்.
சிந்தனையாளர்களை வெற்றி பெற வைக்கும் துறையா இது என்று கேட்டால், நிறைய பேர் முயற்சிக்கிறார்கள். வெற்றி பெறுபவர்கள் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. அந்த வரிசையில் இயக்குநர் பிரபுராம் வியாஸ் இன்னும் படங்களை இயக்கி, உயர்ந்த இடத்திற்கு முன்னேறுவார்.
அவர் நல்ல விசயங்களை இயல்பாக போகிறபோக்கில் சொல்லக்கூடிய திறமைசாலி என்பதை லவ்வர் படம் பார்க்கும் போது தெரியும்.
ரசிகர்களாகிய நீங்கள் உங்களுடைய வாழ்க்கையில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறீர்கள். அதற்கு நடுவில் நேரம் கிடைத்தால் இந்த படத்தை தயவு செய்து திரையரங்கத்திற்கு சென்று பாருங்கள். உங்களுடைய வாழ்க்கைக்கு இந்த படம் ஏதேனும் ஒரு விசயத்தை கற்றுத்தரும்” என்றார்.
இராமானுஜம்