இந்தி நடிகைகள் கரீனா கபூர், அம்ரிதா அரோரா ஆகியோர் பார்ட்டிக்கு சென்று திரும்பிய நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். கரீனாவின் வீட்டிற்கு மும்பை சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இந்தி திரையுலகில் நள்ளிரவு பார்ட்டிகள் பிரபலமானது. சமீபத்தில் நடந்த ஒரு பார்ட்டியில் நடிகைகள் கரீனா கபூர், கரீஷ்மா கபூர், அம்ரிதா அரோரா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் அதனைதொடர்ந்து இயக்குனர் கரண் ஜோகர் வைத்த நள்ளிரவு பார்ட்டியிலும் பங்கேற்றனர். இந்நிலையில் நடிகைகள் கரீனா, அம்ரிதா ஆகியோருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கரீனா கூறுகையில், ‛‛எனக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. நோய் தொற்று கண்டறிந்ததும் என்னை நானே தனிமைப்படுத்தி உரிய நெறிமுறைகளுடன் சிகிச்சை மேற்கொண்டு வருகிறேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் பரிசோதனை செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். என் குடும்பத்தில் உள்ள பணியாளர்கள் உட்பட அனைவரும் இரண்டு முறை தடுப்பூசி போட்டுள்ளனர். தற்சமயம் அவர்களுக்கு நோய் தொற்று எதுவும் இல்லை. சீக்கிரம் இதிலிருந்து மீண்டும் வருவேன்” என்று தெரிவித்துள்ளார்.
கரீனா கலந்து கொண்ட பார்ட்டியில் பங்கேற்ற மேலும் சிலருக்கும் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த பார்ட்டியில் பங்கேற்றவர்களின் விபரங்களை மும்பை சுகாதாரத் துறையினர் சேகரித்து அவர்களுக்கு பரிசோதனை செய்து வருகின்றனர். இதில் சிலருக்கு நோய் தொற்று பாசிட்டிவ் என்றும் சிலருக்கு நெகட்டிவ் என்றும் வந்துள்ளது.
நோய் தொற்று பாதித்த பிரபலங்களின் வீடுகளுக்கு மும்பை சுகாதாரத்துறை சீல் வைத்து வருகிறது. அந்தவகையில் மும்பையில் நடிகை கரீனாவின் அடுக்குமாடி குடியிருப்புக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கரீனா இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
**-அம்பலவாணன்**
