”கூடா நட்பு கேடாய் முடியும்!” – எடப்பாடியை சரமாரியாக விமர்சித்த எஸ்.டி.பி.ஐ

Published On:

| By christopher

sdpi nellai mubarak attack eps on alliance with bjp


”கூடா நட்பு கேடாய் முடியும் என்பது பழமொழி மட்டுமல்ல, அரசியல் உண்மையும் கூட” என அதிமுக – பாஜக உறுதியானது குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக். sdpi nellai mubarak attack eps on alliance with bjp

இதுதொடர்பாக அவர் இன்று (ஏப்ரல் 11) வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக-பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள செய்திகள் வெளியாகியுள்ளன. பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்கு அதிமுக எத்தனை காரணங்களைக் கூறினாலும், அவற்றை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

இந்தக் கூட்டணிக்குப் பின்னால், ஒன்றிய அரசு பல்வேறு வழிகளில் கொடுத்த அழுத்தம் மற்றும் நெருக்கடியே முக்கிய காரணம் என்பதை அரசியல் புரிந்தவர்கள் மட்டுமின்றி பாமர மக்களும் அறிவார்கள். இத்தகைய அழுத்தங்களுக்கு அடிபணிந்து, பாஜகவுடன் கூட்டணி என்கிற தமிழகத்தின் நலனைப் பறிகொடுக்கும் அதிமுகவின் முடிவை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

மாநில உரிமைகளையும், மக்களின் நம்பிக்கையையும் பாதுகாக்க வேண்டிய கடமை ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் உள்ளது. ஆனால், அதிமுகவின் இந்தக் கூட்டணி முடிவு, அந்தக் கடமையை மறந்து, ஒன்றிய பாஜக அரசின் அழுத்தத்திற்கு அடிபணிந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.

“கூடா நட்பு கேடாய் முடியும்” என்பது பழமொழி மட்டுமல்ல, அரசியல் உண்மையும் கூட. பாஜகவுடன் கூட்டணி வைத்த பல மாநிலக் கட்சிகள் இன்றைக்கு அவை தங்கள் அரசியல் அடையாளத்தை இழந்து, மக்களின் நம்பிக்கையைத் தொலைத்து, தோல்வியின் பாதையில் நிற்கின்றன. இந்தக் கூட்டணி மூலம், அதிமுகவும் அதே பாதையைத் தேர்ந்தெடுத்திருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

தமிழக மக்களின் நலனுக்கு எதிராகவும், மாநில உரிமைகளுக்கு எதிராகவும் செயல்படும் பாஜகவுடன் கைகோர்ப்பது, எந்தவொரு மாநிலக் கட்சிக்கும் அழிவைத் தவிர வேறு எதையும் கொண்டுவராது.

தமிழகம் என்பது சமூகநீதி, சமத்துவம், மாநில உரிமைகள் ஆகியவற்றிற்கு உறுதியாக நிற்கும் மண். பாஜகவின் கொள்கைகள் எப்போதும் தமிழகத்தின் கலாச்சாரத்திற்கு எதிரானவை, சமூகநீதிக்கு எதிரானவை, மாநில உரிமைகளைப் பறிக்கும் முயற்சிகளை முன்னெடுப்பவை.

இத்தகைய பாஜகவை, எந்த வழியில் வந்தாலும், யார் மீது சவாரி செய்து வந்தாலும், எந்த உருவில் வந்தாலும், தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். பாஜகவை மட்டுமல்ல, அதன் கூட்டணியையும் தமிழக மக்கள் நிராகரிப்பார்கள்” என நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share