10, 12: மீண்டும் பள்ளிக்குப் போகலாம்: முதல்வர் உத்தரவு!

Published On:

| By Balaji

பத்தாம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வரும் ஜனவரி 19 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக 2020-21 கல்வியாண்டில் இதுவரை பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் பொதுத் தேர்வை எதிர்நோக்கியுள்ள 10, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் உட்பட அனைத்து மாணவர்களுக்கும் ஆன்லைன் கல்வி அளிக்கப்பட்டது. ஆனபோதும் பள்ளிகள் திறந்தால்தான் முழுமையான முறையில் கல்வியைப் பெற முடியும் என்று தனியார் பள்ளிகள் தரப்பினர்கள் கூறினார்கள். ஆனால் கொரோனா அச்சம் விலகாத நிலையில் பெற்றோர்கள் இதற்கு தயங்கினார்கள்.

ADVERTISEMENT

இந்நிலையில் தமிழகத்தின் 19 மாவட்டங்களில் கொரோனா தொற்று வெகுவாகக் குறைந்துவிட்ட நிலையில் பள்ளிகளைத் திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இன்று (ஜனவரி 12) முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில்,

“கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த்தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழ் நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் தான் நோய் தொற்று படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.

28.12.2020 அன்று நடத்தப்பட்ட ஆய்வுக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலும், மூத்த அமைச்சர்களுடன் கலந்தாலோசித்தும், பொங்கல் விடுமுறைக்குப் பின்னர் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் ஜனவரி 6 முதல் 8-ந்தேதி வரை கருத்து கோரப்பட்டது.

ADVERTISEMENT

இக்கூட்டங்களில் கலந்து கொண்ட பெரும்பான்மையான பெற்றோர்கள், பள்ளிகளைத் திறக்க தங்கள் இசைவினை அளித்துள்ளதாக 95 சதவீத பள்ளிகள் அறிக்கை அளித்துள்ளதை கருத்தில் கொண்டும், கல்வி பயில்வதில் மாணாக்கர்களின் வருங்கால நலனை கருத்தில் கொண்டும், வரும் 19-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும்”என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “பள்ளிகள் திறக்கப்படும்போது, ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்களுக்கு மிகாமல் செயல்படவும், அரசு வெளியிடும் வழிகாட்டு நெறி முறைகளுக்கு உட்பட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. அவ்வாறு பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கான விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகின்றது.

அனைத்து மாணவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஏதுவாக, வைட்டமின் மற்றும் துத்த நாக மாத்திரைகள் வழங்க சுகாதாரத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மாணவர்களின் நலன் கருதி, அரசு எடுத்து வரும் கோவிட் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பெற்றோர்களும், ஆசிரியர்களும் மற்றும் மாணவர்களும் முழு ஒத்துழைப்பினை நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என கூறியுள்ளார் முதல்வர்.

**-வேந்தன்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share