சென்னை அடுத்த மாங்காடு அருகே கொளப்பாக்கத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் சிலர் நேற்று முன்தினம் வகுப்பறையில் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மாணவி ஒருவரின் பெற்றோர் மாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட மாணவிகள், பள்ளி சீருடை அணிந்தபடி தங்கள் பெற்றோருடன் மாங்காடு காவல் நிலையத்தில் நேற்று விசாரணைக்காக ஆஜராகியுள்ளனர்.
அங்கு மாணவிகளிடம் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, பேருந்து படிக்கட்டில் பயணித்த மாணவர்களை அடித்த வழக்கில் நடிகையும் பாஜக பிரமுகருமான ரஞ்சனா நாச்சியார் காவல்நிலையத்திற்கு கையெழுத்திட வந்தார்.
சம்பவம் குறித்து மாணவிகளிடம் அவர் கேட்டறிந்தார். பின்னர் “பள்ளி சீருடையுடன் மாணவிகளை விசாரணைக்கு எப்படி அழைக்கலாம்?” என்று காவல்துறை அதிகாரிகளிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது மாணவியின் பெற்றோர் ஒருவர், “தாய் ஸ்தானத்தில் போலீசார் மாணவிகளை கண்டிக்கின்றனர்” என்று ரஞ்சனா நாச்சியாரிடம் கூறினார்.
அதற்கு அவர், “நானும் தாய் ஸ்தானத்தில் தான் பேருந்து படிக்கட்டில் பயணித்த மாணவர்களை அடித்தேன். போலீசார் என்னை சும்மா விட்டார்களா? கைது செய்தார்களே” என்று தெரிவித்தார்.
பின்னர் ரஞ்சனா நாச்சியார் செய்தியாளர்களிடம் இந்த சம்பவம் குறித்து பேசுகையில், “மாணவிகள் பள்ளியில் சண்டையிட்ட சம்பவத்தை காவல்நிலையத்தில் வைத்து ஏன் விசாரிக்க வேண்டும்? பள்ளி சீருடையுடன் மாணவிகளிடம் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியது தவறு. இந்த சம்பவம் குறித்து பள்ளியில் மாணவிகளிடம் விசாரிக்காமல் காவல்நிலையத்தில் புகாரளிக்க தலைமை ஆசிரியர் கூறியுள்ளார்.
விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றால் எப்.ஐ.ஆர் பதிவு செய்வோம் என்று காவல்துறை அதிகாரிகள், மாணவிகளின் பெற்றோர்களை மிரட்டியுள்ளனர். காவல்நிலையத்தில் ஆஜரான மாணவிகளிடம், ‘உங்களையெல்லாம் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்க வேண்டும்’ என்று போலீசார் மிரட்டியுள்ளனர். மாணவிகளிடம் விசாரணை நடத்திய காவல்துறை அதிகாரிகள் மற்றும் தலைமை ஆசிரியர் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகாரளிக்க உள்ளேன்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை!