நெல்லையில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவனை கொலை செய்ய வேண்டும் என்று வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய சக மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி முனியாண்டி, அம்பிகாபதி தம்பதியின் மகன் சின்னதுரை (17).
சின்னதுரை வள்ளியூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார். இவருடன் அதே பள்ளியில் பயிலும் நாங்குநேரியைச் சேர்ந்த சகமாணவர்கள் சின்னதுரையை அடிக்கடி ரேகிங் செய்து வந்துள்ளனர்.
இதனால் சக மாணவர்களுக்கு பயந்து கடந்த ஒரு வாரமாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து உள்ளார் சின்னதுரை. இதனையடுத்து பள்ளி நிர்வாகம் அவரது பெற்றோரை அழைத்து சின்னதுரையை பள்ளிக்கு அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி மீண்டும் பள்ளிக்கு சென்ற சின்னதுரையிடம் ஒரு வாரமாக வராததற்கு என்ன காரணம் என ஆசிரியர்கள் விசாரணை நடத்தினர். சின்னதுரை நடந்ததை சொல்ல கிண்டல் செய்து அடித்த மாணவர்கள் 3 பேரை ஆசிரியர்கள் கண்டித்தனர்.
இதனால் கோபமடைந்த மாணவர்கள் நேற்று பள்ளி முடிந்ததும் சின்னதுரையை அழைத்து பள்ளி வளாகத்தில் வைத்து மிரட்டினர். ஆனால் ஆத்திரம் தீராததால் அனைத்து மாணவர்களும் ஒன்றாக சேர்ந்து சின்னதுரையை கொலை செய்து விடலாம் என முடிவெடுத்தனர்.
இதனையடுத்து நேற்று இரவு 10.30 மணி அளவில் சின்னதுரை வீட்டிற்கே சென்று அரிவாளால் வெட்டினர். அண்ணனை யாரோ வெட்டுவதை பார்த்து தடுக்க வந்த 14 வயது தங்கை சந்திர செல்வியையும் மாணவர்கள் அரிவாளால் வெட்டியுள்ளனர்.
இருவரும் ஆபத்தான நிலையில் நாங்குநேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு நியாயம் கேட்டு நேற்று இரவே நாங்குநேரியில் உள்ள மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது சின்னதுரையின் தாத்தா மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
இந்நிலையில் மாணவன் சின்னதுரை மற்றும் அவரது தங்கையை அரிவாளால் வெட்டிய சக மாணவர்கள் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்த மாணவர்கள் மீது, வன்கொடுமை தடுப்பு, கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சக மாணவனை 6 மாணவர்கள் ஒன்று சேர்ந்து அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தால் வள்ளியூர் அரசு பள்ளி உள்ள பகுதி மற்றும் நாங்குநேரி பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில், கடந்த ஓரிரு நாட்களில் 10க்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சரவணன்
வாரிசு படத்தால் நஷ்டம்: விஜய்க்கு கேரள விநியோகஸ்தர் கடிதம்!
“எ.வ.வேலு குறித்து மோடி பேசியதை அவை குறிப்பிலிருந்து நீக்க வேண்டும்” – டி.ஆர்.பாலு கடிதம்!
Comments are closed.