அமைச்சர்கள் குழு உடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்று (பிப்ரவரி 25) போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். school locked for jactogeo protest
பழைய ஓய்வூதிய திட்டம், அரசு காலிப்பணியிடங்களை நிரப்புவது, சரண் விடுப்பு ஒப்படைப்பு, ஒப்பந்த ஊழியர்களை காலமுறை ஊதியத்தின் கீழ் கொண்டு வருவது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இன்று மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (ஜாக்டோ-ஜியோ) அறிவித்து இருந்தது.
இதற்கிடையே முதலமைச்சர் அறிவுறுத்தலின் பேரில் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கயல்விழி செல்வராஜ் ஆகியோரை கொண்ட அமைச்சர்கள் குழு நேற்று அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
அதேபோன்று, பேச்சுவார்த்தை முடியும் வரை ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் எவ்வித போராட்டங்களும் நடத்தக்கூடாது என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நேற்று உத்தரவிட்டது.
எனினும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், நீதிமன்ற உத்தரவையும் மீறி திட்டமிட்டப்படி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று ஜாக்டோ ஜியோ அறிவித்தது.
அதன்படி சென்னை, மதுரை, கோவை, புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தற்செயல் விடுப்பு எடுத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் மாணவர்களின் தேர்வு காரணமாக மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகள் மட்டுமே முழு அளவில் இயங்கி வருகின்றன. தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாததால் பெற்றோர்கள் குழந்தைகளை மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். இலுப்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்கு பூட்டு போடப்பட்டுள்ள காட்சியும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதே போன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆயிரக்கணக்கான அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இன்று பள்ளிகளுக்கு செல்லாமல் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். சில பள்ளிகள் தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.