தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தைப் புதுப்பிப்பதற்கான உயர்மட்ட வல்லுநர் குழு மற்றும் புதிய கலைத்திட்ட வடிவமைப்புக் குழுக் கூட்டம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று (நவம்பர் 24) நடைபெற்றது.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பல்வேறு துறை சார்ந்த அறிஞர்கள், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். இதில், எளிமையான பாடத்திட்டத்தை உருவாக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தை தொடர்ந்து அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “இன்று மட்டும் 5 மணி நேரம் ஆலோசனை நடத்தப்பட்டது. அடுத்து மார்ச் வரை இதுபோன்று கூட்டம் நடத்தப்படும். 2026-2027 கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை என்ன மாதிரியான திட்டங்கள் கொண்டு வரலாம் என ஆலோசிக்கப்படும். படிபடியாக அடுத்தடுத்த வகுப்புகளுக்கும் இதுபோன்று ஆலோசிக்கப்படும்.
புரிதலுடன் மாணவர்கள் படிப்பதற்கு தேவையான பாடத்திட்டங்கள் குறித்தும், ஆசிரியர்களுக்கு எப்படி பயிற்சி கொடுக்க போகிறோம் உள்ளட்டவைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்படும்” என்றார்.
அவரிடம், டெட் தேர்வு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு அவர், “டெட் தேர்வு தொடர்பாக வந்த தீர்ப்பில் அனைவருக்கும் தேர்வு கட்டாயம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. 23.8.2010க்கு முன்பு இந்த தேர்வு கிடையாது. ஆனால் அதற்கு முன்னால் வந்தவர்களும் இந்த தேர்வு எழுத வேண்டும் என்கிற போது, சில பாயிண்ட்ஸ் வலுவாக இருக்கிறது என்று நாம் நினைக்கிறோம். தமிழ்நாடு முதல்வரிடமும் பேசியிருக்கிறோம். நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடக்கும் போது என்னவெல்லாம் செய்யலாம் என்று பேசியிருக்கிறார். நமது செயலாளர் மூலமாக,மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் செயலாளரிடம் பேசி அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி சந்திக்கவுள்ளோம். அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.
