மதிய உணவு உண்ட மாணவர்களுக்கு உடல் நலம் பாதிப்பு!

Published On:

| By admin

ராஞ்சியின் புறநகரில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் பகல் உணவை உட்கொண்ட 25 மாணவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. கடந்த வியாழக்கிழமை பிற்பகல் ராஞ்சியின் புறநகரில் சில்லி பிளாக்கில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் 92 மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. அப்போது மாணவர்களுக்கு பருப்பு வழங்கப்பட்ட போது அதில் பல்லி இருந்ததாக சில மாணவர்கள் தெரிவித்ததால், உடனே மாணவர்களுக்கு பருப்பு பரிமாறுவது நிறுத்தப்பட்டது.

அன்று மாலை பள்ளி முடியும் வரை மாணவர்கள் யாருக்கும் உடல்நல பாதிப்பு ஏற்படவில்லை. பின்னர் மாணவர்கள் வீடு திரும்பியதும் உடல்நலப் பிரச்சினைகளுடன் 25 மாணவர்கள் உள்ளூர் சமூக சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டனர். நேற்று இரவுக்குள் அனைத்து மாணவர்களும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

இதுகுறித்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர் திலீப் மிஷ்ரா கூறுகையில், “வியாழக்கிழமை மதியம் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கிய பொழுது பரிமாறப்பட்ட பருப்பில் பல்லி இறந்து கிடந்ததாக சில மாணவர்கள் தெரிவித்தனர். உடனே பருப்பு பரிமாறுவது நிறுத்தப்பட்டது. பின்னர் அன்று மாலை வீடு திரும்பிய 25 மாணவர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு சமூக சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் அன்று மதியமே மூன்று மாணவர்கள் குமட்டல் மற்றும் வாந்தி போன்ற புகார்களுடன் சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டனர்.” என்று தெரிவித்தார்.

மேலும், “இதுகுறித்து நேற்று விசாரணை நடத்த பள்ளி நிர்வாகக் குழுவின் கூட்டம் கூட்டப்பட்டது. உணவு விஷயத்தில் அலட்சியமாக செயல்ப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share