வெடிகுண்டு மிரட்டல் : இண்டர்போல் உதவியை நாடும் தமிழ்நாடு போலீஸ்!

Published On:

| By christopher

Tamilnadu police seek Interpol help

சென்னையில் இ மெயில் மூலமாக 13 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரைக் கண்டுபிடிக்க, மத்திய உளவு பிரிவான (ஐபி), இண்டர்போல் உதவியை கேட்டுள்ளது சென்னை மாநகர காவல்துறை.

தமிழ்நாடு முழுவதும் தினமும் பள்ளிகள் துவங்கியதும், பள்ளி கல்வித் துறையிலிருந்து ஏதாவது அரசு உத்தரவு வந்திருக்கிறதா என்று கம்ப்யூட்டரில் இ மெயில்களை பள்ளி நிர்வாகிகள் செக் செய்வது வழக்கம்.

அப்படி பார்த்தபோது தான் சென்னையில் மொத்தம் 13 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது கண்டறியப்பட்டது. இதனால் பதற்றம் ஏற்பட்ட நிலையில் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக சம்பந்தப்பட்ட பள்ளிகளில் இருந்து மாணவர்கள் வெளியேறிய நிலையில், சென்னை மாநகர காவல்துறையினர் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். முடிவில் அது வெறும் மிரட்டல் என்று கண்டறியப்பட்டது.

எனினும் பள்ளிகளுக்கு எங்கேயிருந்து மெயில் வந்தது யார் அனுப்பினார் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் சைபர் கிரைம் போலீஸார் கடந்த 24 மணி நேரமாக போராடி வருகின்றனர்.

மத்திய உள்துறைக்கு அவசர கடிதம்!

பள்ளிக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் இ மெயில் வெளிநாட்டிலிருந்து வந்துள்ளது என்று போலீசார் கண்டறிந்த நிலையில்,

அந்த இ மெயில் ஐடி பயன்படுத்தியவரின் முகவரியை கண்டுபிடிக்க மத்திய உளவு பிரிவான (ஐபி) இண்டர்போல் உதவியை கேட்டு மத்திய உள்துறைக்கு அவசர கடிதம் அனுப்பியுள்ளது தமிழக காவல்துறை.

மேலும் குறிப்பிட்ட இ மெயில் ஐடியை தொடங்க குற்றவாளி பயன்படுத்திய செல்போன் எண்ணை கேட்டு சுவிட்சர்லாந்தை தலைமையிடமாக கொண்ட இ மெயில் நிறுவனத்திற்கும் தமிழக காவல்துறை கடிதம் அனுப்பியுள்ளது.

இந்த நிலையில் இன்று பிப்ரவரி 9ஆம் தேதி காலையில் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், “வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக தகவல்கள் வந்தால் பெற்றோர்கள் பயப்பட தேவையில்லை, இன்று கூட பள்ளி வளாகத்தில்தான் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம்.

காவல்துறையினர் சரியான முறையில் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். மிரட்டலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வணங்காமுடி

லால் சலாம் எப்படி இருக்கிறது?… ரசிகர்கள் விமர்சனம்!

தங்கம், வெள்ளி விலையில் ஏற்பட்ட சிறிய மாற்றம்!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share